காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஊடுருவ முயற்சி…
காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதும், இந்திய வீரர்கள் தீரத்துடன் சண்டை புரிந்து அவர்களை விரட்டி அடிப்பதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்த நிலையில் குப்வாரா மாவட்டம் டாங்தர் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்புபடை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை கண்டதும் சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புபடை வீரர்கள் பயங்கரவாதிகள் 3 பேரையும் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.
3 பேர் சுட்டுக்கொலை
ஆனால் அதனை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இந்திய எல்லையை நோக்கி முன்னேறினர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த டாங்தர் செக்டார் பகுதியை குறிவைத்து நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய தாக்குதலை தொடுத்தனர். சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திய அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.