Breaking News
தண்ணீரை அமிர்தம் போல சேமிக்க வேண்டும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேச்சு

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கோணேட்டம்பேட்டை கிராமம். இங்குள்ள தொடக்கப்பள்ளியில் தான் அவர் படித்தார்.

சினிமா பின்னணி பாடகராக பிரபலமான பிறகும் தனது பிறந்த ஊரையும், ஊர் மக்களையும் மறக்காதவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு (2017) தனது பிறந்தநாளை இந்த கிராமத்தில் எளிமையான முறையில் கொண்டாடினார். அப்போது அவர், தான் பிறந்த ஊருக்கு நல்ல காரியம் செய்ய விரும்புவதாக கூறினார்.

அதன்படி கோணேட்டம்பேட்டை கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை தனது சொந்த செலவில் அமைத்தார். அதில் உள்ள குடிநீர் கிராம மக்களுக்கும், அவர் படித்த பள்ளிக்கும் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அந்த பள்ளியில் 7 கழிவறைகளும் கட்டப்பட்டன. இவற்றின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடிநீர் குழாய்கள், கழிவறைகள் போன்றவற்றை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் இந்த கோணேட்டம்பேட்டை கிராம மண்ணில் பிறந்தவன். இப்போது எத்தனை நாடுகளுக்கு சென்றாலும், எவ்வளவு புகழ் உச்சிக்கு சென்றாலும் இந்த கிராமத்திற்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை.

இந்த கிராமத்திற்கு நான் செய்த காரியங்கள் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இங்குள்ள ஒவ்வொரு தெருவுக்கும் 2 கழிவறைகளை கட்டி தர விரும்பினேன். ஆனால் அதை விட முக்கியம் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நான் படித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீரும், கழிவறை வசதியும் ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என்று முடிவு செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாம் தண்ணீரை வீணாக்கக்கூடாது. தற்போது இரு மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சமயங்களில் தண்ணீரை எப்படி சேமிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. இங்கு நற்காரியங்களை செய்ய பாலசுப்பிரமணியம் யார்? அவர் ஆந்திராவை சேர்ந்தவர் அல்லவா? என்கிறார்கள்.

நான் ஆந்திராவையோ, தமிழ்நாட்டையோ சேர்ந்தவன் அல்ல. இந்த உலகத்தை சேர்ந்தவன். மக்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் அமிர்தமாக சேமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆயர்பாடி மாளிகையில்… என்ற தமிழ் பக்திபாடலையும், தெலுங்கு பட பாடல்களையும் பாடினார். பின்னர் அவர் தேசிய கீதத்தை பாடி கிராம மக்களை மகிழ்வித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.