Breaking News
வெள்ளம் வடிய தொடங்கியதால், கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் கடந்த 8-ந் தேதி முதல் பெய்த பேய்மழையும், அணைகள் திறப்பால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் சீர்குலைத்து இருக்கிறது. அத்துடன் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவும் மக்களின் சோகத்தை பல மடங்காக பெருக்கியது.

100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவில் சிக்கிய மக்கள் வீடு மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கின்றனர். அப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்ட 5,645 முகாம்களில் 7¼ லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கி இருக்கின்றனர்.

மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் ஏராளமானோர் வீடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் வரை மீட்பு நடவடிக்கையை தொடர மீட்புக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மட்டுமின்றி உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். அப்படி எர்ணாகுளம் பரூரில் நேற்று முன்தினம் இரவு மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இத்துடன் சேர்த்து 8-ந் தேதி முதல் தீவிரமடைந்த மழையில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்து வந்த இந்த மீட்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.

இதைப்போல 8-ந் தேதி முதல் விடாமல் பெய்து வந்த பெருமழையும் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் எந்த பகுதியிலும் நேற்று பெருமழை பெய்ததற்கான தகவல் இல்லை. அத்துடன் பல பகுதிகளிலும் வெள்ளம் வடியத்தொடங்கி இருக்கிறது. பல அடி உயரத்துக்கு சூழ்ந்திருந்த நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இதனால் அந்த பகுதிகளில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு வாழும் மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தில் சேதமடைந்திருப்பதை பார்த்தும், வீடு முழுவதும் சேறும், சகதியும் நிரம்பியிருப்பதை கண்டும் கண்ணீர் வடிக்கின்றனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் மாநிலத்தில் முடங்கிக்கிடந்த ரெயில் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பாலக்காடு மண்டலத்தில் சோரன்பூர்-கோழிக்கோடு இடையிலான ரெயில் பாதையும், திருவனந்தபுரம் மண்டலத்தில் எர்ணாகுளம்-கோட்டயம்-காயங்குளம் இடையிலான ரெயில் பாதையும் சீரமைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டன. எனினும் குறிப்பிட்ட சில ரெயில்களை ரத்து செய்த ரெயில்வே, இயக்கும் ரெயில்களையும் குறைந்த வேகத்திலேயே இயக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

கொச்சி விமான நிலையம் 26-ந் தேதி வரை மூடப்பட்டு உள்ள நிலையில், அங்குள்ள கடற்படை தளத்தில் இருந்து நேற்று முதல் சிறிய ரக பயணிகள் விமான இயக்கம் தொடங்கியது. அதன்படி காலையில் பெங்களூருவில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று கடற்படை தளத்தில் இறங்கியது. அதைத் தொடர்ந்து மேலும் விமானங்கள் வந்து சென்றன.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தொற்று நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் 6 சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுமார் 100 டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினர் 2 விமானங்களில் நேற்று கேரளாவுக்கு விரைந்தனர். அங்கு மருத்துவ முகாம்களை திறக்க இருக்கும் இந்த குழுவினரின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாநில மருத்துவக்கல்வி மந்திரி கிரிஷ் மகாஜனும் வந்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.