Breaking News
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்-தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என்றும், வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரஹீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரிமா சுந்தரம், வக்கீல் பினாகி மிஸ்ரா ஆகியோரும் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் வி.மோகனா, அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா, பா.வினோத் குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கோர்ட்டில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், அவர்கள் எப்போது இந்த புகைப்படங்களை எடுத்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்றும் கூறினார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை திசை திருப்புவதற்காக எதிர்தரப்பில் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு அந்த அறிக்கையை தாக்கல் செய்ததாகவும் கூறப்பட்டது.

தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை வாசித்த அரிமா சுந்தரம், மூடப்பட்டுள்ள ஆலையை பராமரிக்க மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். “ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை பராமரிக்க 500 என்ஜினீயர்கள் மற்றும் 1000 ஊழியர்கள் தங்களிடம் உள்ளதாக கூறிய அரிமா சுந்தரம் அப்படி ஆலையை சோதனை செய்ய வேண்டும் என்றாலும் ஆலை இயக்கப்பட வேண்டியது அவசியம். இதற்காக குறைந்தது 25 நாட்களாவது இந்த ஆலை இயங்குவது அவசியம். அப்போது தான் சோதனை முழுமை அடையும். எனவே ஆலையை பராமரிக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆலை செயல்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அப்போது அவர் கூறினார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.மோகனா எதிர்ப்பு தெரிவித்ததோடு, தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் குறித்து இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த இடைக்கால அறிக்கையை நீதிபதிகளிடம் வழங்கினார்.

பின்னர் தூத்துக்குடியில் மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன்? என்று நீதிபதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, அங்கு கூடியிருந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சித்ததால் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அரிமா சுந்தரம் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, இந்த போராட்டம் மக்களின் உரிமை போராட்டம் என்றும் இது யாராலும் தூண்டப்பட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும் இதனை கொச்சைப்படுத்துவதற்கு ஆலை நிர்வாகத்துக்கு உரிமை இல்லை என்றும் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியிலும் சுற்றுவட்டார பகுதியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

பின்னர் நீதிபதிகள் தங்களுக்குள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி விட்டு, “ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைக்கலாம். அந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியன், சந்துரு, பிரபா ஸ்ரீதேவன் ஆகிய மூவரில் ஒருவர் பெயரை பரிசீலிக்கலாம். தமிழக அரசு மற்றும் ஆலை நிர்வாகம் தரப்பில் இது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்” என்று கூறினார்கள்.

இதற்கு ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், தமிழ்நாட்டில் இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் யாரும் வேண்டாம். ஏனென்றால் இவர்கள் மூவரும் தனித்தனியாக இந்த சம்பவம் பற்றிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் அண்டை மாநிலமான கர்நாடகம் அல்லது கேரளாவில் இருந்து ஏதேனும் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாம் என்று கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மோகனா, யோகேஷ் கன்னா ஆகியோரும், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் பாரபட்சமானவர்கள் என்று கூறுவது மிகவும் தவறு என்று கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் மத்திய பசுமை தீர்ப்பாயம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பாக தலா ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த குழு இரு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் இந்த குழு தனது முடிவை அறிவிக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த குழுவை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்யும். இந்த குழு உறுப்பினர்களின் ஊதியம் முதலான செலவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்வார். இந்த குழுவின் முடிவில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இரு தரப்பினரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.