Breaking News
3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா விராட் கோலியின் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இமாலய இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து ‘செக்’ வைத்தனர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 62 ரன்களுடன் தத்தளித்தது. ஆனால், அதன்பின்பு ஜோஸ் பட்லர்- பென்ஸ்டோக்ஸ் ஜோடி நங்கூரம் போல நிலைத்து நின்று, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி கொடுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினர். தேனீர் இடைவேளை வரை இவர்களை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் தொடர்ந்து சதத்தை பூர்த்தி செய்தார்.

80 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகே ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 231 ரன்களாக உயர்ந்த போது, ஜோஸ் பட்லர் (106 ரன், 176 பந்து, 21 பவுண்டரி) ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அவர் அப்பீல் செய்து பார்த்தும் நடுவரின் தீர்ப்பு மாறவில்லை. பட்லர்-ஸ்டோக்ஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி உடைந்ததும் இங்கிலாந்து நிலைகுலைந்தது. பின்னர் காயத்துடன் இறங்கிய பேர்ஸ்டோ (0), கிறிஸ் வோக்ஸ் (4 ரன்), பும்ராவின் தாக்குதலில் சிதறினர். நீண்ட நேரம் போராடிய பென் ஸ்டோக்சை (62 ரன், 187 பந்து, 6 பவுண்டரி) பாண்ட்யா காலி செய்தார். 4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும் எதிபார்த்தது போலவே, இந்திய அணி 10-வது விக்கெட்டையும் உடனடியாக வீழ்த்தி வெற்றியை ருசித்தது. 104.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அடைந்த தோல்வியால் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி, 3-வது டெஸ்டில் வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஆக.30 ஆம் தேதி துவங்குகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.