Breaking News
சீனாவை முந்தும் இந்திய மக்கள் தொகை

வரும், 2050ம் ஆண்டில், உலக மக்கள்தொகையில், இந்தியாவின் பங்கு, தற்போதுள்ள அளவை விட குறைவாக இருக்கும். அதே நேரத்தில், சீனாவை விட, 25 சதவீதம் அதிகமாக இருக்கும்’ என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், தன்னார்வ அமைப்பான, பி.ஆர்.பி., எனப்படும் மக்கள்தொகை ஆய்வு அமைப்பு, மக்கள்தொகை வளர்ச்சி குறித்த ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 2050ம் ஆண்டில், சீனாவின் மக்கள்தொகையை விட, இந்தியாவின் மக்கள்தொகை, 25 சதவீதம் அதிகமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

டிமாகிரபிக் டிரான்சிஷன் :

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மக்கள்தொகை, 2018 கணக்கின்படி, 137 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள்தொகை, 139 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 0.93 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 153 கோடியாக இருக்கும். அதுவே, 2030 – 2050 வரையிலான காலத்தில், 0.46 சதவீதம் வளர்ச்சியுடன், 168 கோடியாக இருக்கும்.

சீனாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 142 கோடியாகவும், 2050ம் ஆண்டில், 134 கோடியாகவும் இருக்கும். இந்தக் காலத்தில், சீன மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் மக்கள்தொகை, 2030ம் ஆண்டில், 8 சதவீதமும், 2050ம் ஆண்டில், 25 சதவீதமும் அதிகமாக இருக்கும்.

‘டிமாகிரபிக் டிரான்சிஷன்’ எனப்படும், அதிக பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் இருந்து, குறைந்த பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்கு, இந்த நாடுகள் மாறுவதே இந்த வேறுபாட்டுக்கு காரணம். சீனாவை விட இந்தியாவின் மக்கள்தொகை அதிக மாக இருந்தாலும், உலக மக்கள் தொகையில், இந்தியாவின் பங்கு குறையும்.

69.8 சதவீதம் குறையும் :

தற்போது உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு, 18 சதவீதமாக உள்ளது. இது, 2030ம் ஆண்டில், 17.9 சதவீதமாகவும், 2050ம் ஆண்டில், 17.1 சதவீதமாகவும் குறையும். அதேபோல், தெற்காசியாவில் இந்தியாவின் மக்கள்தொகை பங்கு, தற்போது, 71.8 சதவீதமாக உள்ளது. இது, 2050ம் ஆண்டில், 69.8 சதவீதமாக குறையும். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.