Breaking News
‘வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணம்’ கேரள அரசு குற்றச்சாட்டு

கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.

இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.

மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

முல்லைப்பெரியாறு அணை யில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள், புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் ஏற்கனவே மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் பெருமழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது.

இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும்.

எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையில் இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும். பெருவெள்ளம் ஏற்படும் போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழுவுக்கு வழங்க வேண்டும்.

மேலும் இந்த மேற்பார்வை குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை குழு முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர்வரத்து, நீர்மட்ட அளவு, நீர் திறப்பு ஆகியவை குறித்த நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

இந்த மேலாண்மை குழு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் அல்லது மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் அல்லது மேற்பார்வை பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படவேண்டும்.

இவ்வாறு கேரள அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.