Breaking News
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 7 பதக்கம்

துடுப்பு படகு போட்டியில் தங்கம்

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று இந்தியா 2 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது.

துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான 4 பேர் கொண்ட ஸ்கல்ஸ் பிரிவின் இறுதி சுற்றில் சவான் சிங், டட்டு போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி களம் இறங்கியது. படகின் இருபுறமும் துடுப்பை வேகமாக இயக்கிய இவர்கள் 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். இந்தோனேஷியா 2-வது இடமும் (6 நிமிடம் 20.58 வினாடி), தாய்லாந்து 3-வது இடமும் (6 நிமிடம் 22.41 வினாடி) பெற்றது. ஆசிய விளையாட்டு துடுப்பு படகு போட்டியில் இந்தியா மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும்.

தங்கமகன்களாக ஜொலித்த இந்த 4 பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவது சிறப்பம்சமாகும். மூத்த வீரர் சவான்சிங் கூறுகையில், ‘கடைசி 100 மீட்டர் தூரத்திற்கு வரும் போது கால் முதல் உச்சந்தலை வரை செயலிழந்தது போல் அனைவரும் களைத்து போய் விட்டோம். அப்போது என்னிடம், உங்கள் பெயர் என்ன என்று கேட்டாலும் என்னால் சொல்லியிருக்க முடியாது’ என்றார். மேலும் அவர் கூறும் போது, ‘முந்தைய நாள் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. சக வீரர்களிடம், நாம் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். இது நமக்கு வாழ்வா-சாவா போட்டியாகும் என்று கூறினேன். அதன்படியே நாங்கள் சாதித்துள்ளோம்’ என்றார்.

வெண்கல நாயகனுக்கு உடல்நலம் பாதிப்பு

முன்னதாக துடுப்பு படகில் லைட்வெயிட் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் துஷ்யந்த் 7 நிமிடம் 18.76 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தென்கொரியாவின் ஹியன்சு பார்க் (7 நிமிடம் 12.86 வினாடி) தங்கப்பதக்கமும், ஹாங்காங்கின் ஹின் சுன் சிவ் (7நிமிடம் 14.16 வினாடி) வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

துஷ்யந்த் ராணுவத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஆசிய விளையாட்டிலும் இவர் வெண்கலம் வென்றிருந்தது நினைவு கூரத்தக்கது. இந்த போட்டியில் இலக்கை பெரும்பாடு பட்டு கடந்த துஷ்யந்த் நீர்ச்சத்து குறைபாடு, ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டார். பிறகு உடனடியாக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் சென்று குளுக்கோஸ் கொடுத்து முதலுதவி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பதக்க அணிவிப்பு விழாவுக்கு வந்த போது, நிற்க கூட முடியாமல் மீண்டும் நிலைகுலைந்து விழுந்தார். இதையடுத்து அவரை ஸ்டிரச்சர் மூலம் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பிறகே இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அரியானாவைச் சேர்ந்த 25 வயதான துஷ்யந்த் கூறுகையில், ‘கடைசி 500 மீட்டர் தூரத்தில், இது தான் நமது வாழ்க்கையில் கடைசி ரேஸ் என்று எனக்குள் கூறி உத்வேகம் அளித்துக் கொண்டு விடாமுயற்சியோடு முன்னேறினேன். இறுதிகட்டத்தில் நான் எங்கு இருக்கிறேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆனாலும் கை மட்டும் தொடர்ந்து துடுப்பை இயக்கிக் கொண்டிருந்தது. ஜலதோஷம் மற்றும் தொண்டை வலியும் சிரமத்தை கொடுத்தது. மேலும் உடல்எடையை (72 கிலோ) சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டிக்கு முன்பாக அதிகமாக சாப்பிடவும் இல்லை. இரண்டு பிரட் மற்றும் ஒரு ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டேன். வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருந்தது. அதனால் தான் சக்தியை இழந்து முழுமையாக தளர்ந்து போய் விட்டேன்’ என்றார்.

பவான்சிங்-ரோகித் குமார்

இதே போல் துடுப்பு படகு லைட்வெயிட் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பவான்சிங், ரோகித் குமார் ஜோடி 7 நிமிடம் 04.61 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. முதல் இரு இடங்களை ஜப்பான், வடகொரியா ஜோடிகள் பெற்றன. கனரக வாகன ஓட்டுனரின் மகனான பவான்சிங் தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய நாள் துடுப்பு படகு போட்டியில் 4 பிரிவுகளின் இறுதி சுற்றில் இந்தியா தோல்வி தழுவியது. இந்திய துடுப்பு படகுக்கு இது கருப்பு நாள் என்று பயிற்சியாளர் இஸ்மாயில் பெய்க் வர்ணித்தார். அதற்கு இந்திய வீரர்கள் நேற்று ஒரு வழியாக பரிகாரம் தேடிக்கொண்டனர்.

போபண்ணா ஜோடி கலக்கல்

டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்- டெனிஸ் யேவ்செயேவ் (கஜகஸ்தான்) இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. இந்த ஆட்டம் 52 நிமிடங்கள் நடந்தது. ஒட்டுமொத்த ஆசிய போட்டி டென்னிஸ் வரலாற்றில் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவுக்கு கிடைத்த 4-வது தங்கம் இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் இஸ்தோமினிடம் (உஸ்பெகிஸ்தான்) தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

ஹீனா சித்து

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றின் மூலம் இந்தியாவின் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் முதல் 8 இடத்திற்குள் நுழைந்தனர். ஆனால் இறுதி சுற்றில் காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியனான 16 வயதான மானு பாகெர் (176.2 புள்ளி) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, மறுபடியும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதே சமயம் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான ஹீனா சித்து 219.2 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை அணிவித்துக் கொண்டார். இதில் சீனாவின் குயான் வாங் 240.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், தென்கொரியாவின் மின் ஜங் கிம் 237.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

இந்தியாவுக்கு ஒரே நாளில் 7 பதக்கம்

இந்த ஆசிய விளையாட்டு திருவிழாவில் நேற்று தான் இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்த நாள் என்று சொல்ல வேண்டும். டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் தங்கப்பதக்கம், ஒற்றையரில் வெண்கலம், துடுப்பு படகு போட்டியில் ஒரு தங்கம், 2 வெண்கலம், பெண்கள் கபடியில் வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் என்று நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிட்டியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.