பக்தர்கள் நம்பிக்கையை அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது
பெரம்பலூர்: பெரம்பலூரில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீ டூ பிரச்னையென்பது, போகிற போக்கில் யார்மீது வேண்டுமானாலும் சேற்றை வாரிப்பூசிவிடலாம் என்பதை ஏற்க முடியாது. அப்படிப்பார்த்தால் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் யாருமே பணிசெய்ய முடியாது. கேரளாவில் ஏற்பட்டுள்ளது பிரச்னையல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் கோயில்கள் உள்ளன.
எந்தக் கோயிலிலும் பெண்கள் வரக்கூடாது என்பது நடைமுறையில் இல்லை. இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவை நூற்றாண்டுகளாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பக்தர்களின் நம்பிக்கையை அழிப்பதாக இருக்கிறது. பக்தர்களின் நம்பிக்கையை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.