Breaking News
‘தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று தப்புக்கணக்கு போட்டார் தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதி. ஜெயலலிதா துணிந்து நின்று, தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, எம்.ஜி.ஆர். கண்ட கனவை நனவாக்கினார். இந்தியாவிலேயே எந்த கட்சித்தலைவரும் இவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. அவ்வளவு சோதனையை கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கொடுத்தார்.
எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம்தான் வாரிசு. தி.மு.க.வை போல குடும்ப அரசியல் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகிறார், யார் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறார், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது என்று கண்டறிந்து இருபெரும் தலைவர்களும் அவர்களுக்கு பதவி வழங்கினார்கள். தி.மு.க.வில் இதுபோன்று பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஜனநாயக கட்சி, இந்தியாவிலேயே ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கின்ற ஒரே கட்சி அ.தி.மு.க. ஆகவே, யாராலும் இந்த கட்சியை அழிக்க முடியாது.

இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். ஜெயலலிதா இருக்கும்பொழுது 1½ கோடி தொண்டர்கள் இருந்தார்கள். இன்னும் 30 லட்சம் தொண்டர்கள் சேர இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் இருக்கிற ஒரே இயக்கம் தமிழகத்தில் அ.தி.மு.க. தான். அதுவும், இளைஞர்கள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க. இருபெரும் தலைவர்களின் வழியிலே இன்றைக்கு ஆட்சியும், கட்சியும் சிறப்பான முறையிலே பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தி.மு.க.வின் தலைவரான மு.க.ஸ்டாலினால் பொறுக்கமுடியவில்லை.

கருணாநிதி இருக்கும்பொழுதே அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் (மு.க.ஸ்டாலின்) எங்களை விரட்ட பார்க்கிறீர்கள். தி.மு.க. ஆள் வைத்து செய்கிற கட்சி. அ.தி.மு.க. சொந்தமாக உழைக்கிற கட்சி. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. தமிழகத்திலே ஒரு போதும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது.

நிலத்தடி நீரை உயரச் செய்ய ஓடை மற்றும் நதிகளிலே தடுப்பணை கட்டுவதற்கு தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். குடிநீர் பிரச்சினையை ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.

எப்பொழுது பார்த்தாலும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல், ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க., தி.மு.க. என்றாலே ஊழல். ஏற்கனவே, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு இதை சொல்லி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற ஊழலுக்கு குடிநீர் குழாய்களே சான்று. திருக்கழுக்குன்றம், வீராணத்தில் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 1000 குடிநீர் குழாய்கள் அப்படியே கிடக்கிறது. வீராணம் ஊழலில் டெண்டர் எடுத்த சத்தியநாராயணன் இறந்தே போய்விட்டார்.

தி.மு.க. ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழலால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர். கூட்டுக்குடிநீர் பாதிக்கப்பட்ட காரணத்தினாலே, சென்னைக்கு வரவேண்டிய குடிநீர் கிடைக்கவில்லை. கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டம் ஊழல் நிறைந்த திட்டமாக இருந்ததால், அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆகவே, ஜெயலலிதா புதிய வீராணம் திட்டம் கொண்டுவந்து, இன்றைக்கு சென்னை மக்களுக்கு தங்குதடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கின்ற காட்சியை அ.தி.மு.க. ஆட்சியில்தான் பார்க்க முடியும்.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு இருந்தால், அந்த வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டுவிட்டது. முதன்முதலில் விசாரணை, மு.க.ஸ்டாலின் மீது தான் வந்தது.

தி.மு.க.வில் கிட்டத்திட்ட 10 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. அத்தனை வழக்குகளையும் தனி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதனால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். அதற்காக தான் எந்த ஊழலும் செய்யாத அ.தி.மு.க. அரசு மீது அவர்கள் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.