Breaking News
‘என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ ரஜினிகாந்த் திடீர் விளக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரசாரம் செய்து வருவது என் கவனத்துக்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நம் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.

நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப்போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்?. நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம்.

ஒருவரது எண்ணங்கள் சரியானதாக இருந்தால் தான் அவரது செயல்பாடுகள் சரியாக இருக்கும். எனவே, தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நான் அடிக்கடிச் சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வர வேண்டாம். மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை, பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.

30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.

சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொதுமக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி பொதுமக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்தில் இருந்து நீக்கி இருக்கிறோம். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை.

ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்க கூடாது.

மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.