Breaking News
சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நீளம் தாண்டுதலில் சாதனை
சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51–வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்றனர்.
3–வது மற்றும் கடைசி நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் லயோலா வீரர் சுவாமிநாதன் 7.71 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் (2017) பிரசிடென்சி வீரர் விஷ்ணு 7.69 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சுவாமிநாதன் நேற்று தகர்த்தார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை ஹர்ஷினி 6.08 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 2005–ம் ஆண்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ரேவதி 5.99 மீட்டர் தூரம் தாண்டியதே முந்தைய சாதனையாக இருந்தது.

நிதின் தங்கம் வென்றார்
ஆண்களுக்கான அரைமாரத்தான் பந்தயத்தில் ஜெகதீஷ் (அன்னை வயோலெட்), 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.எம்.கே.விவேகானந்தா), 110 மீட்டர் தடை ஓட்டத்தில் வீரமணி, வட்டு எறிதலில் சூர்யா, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரகுராம் (மூவரும் எம்.சி.சி.), உயரம் தாண்டுதலில் இஷா முகமது (டி.ஜி.வைஷ்ணவா), டெக்கத்லானில் லோகேஸ்வரன் (லயோலா) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான அரை மாரத்தான் பந்தயத்தில் ஆனந்தி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீஜா (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சப்மிதா (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) உள்ளிட்டோர் முதலிடத்தை பிடித்தனர்.

ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா சாம்பியன்
ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி 7 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கத்துடன் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லயோலா கல்லூரி 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 16–வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. எத்திராஜ் கல்லூரி 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடம் பெற்றது. சிறந்த வீராங்கனையாக ஸ்ரீஜாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), சிறந்த வீரராக நிதினும் (ஆர்.எம்.கே.விவேகானந்தா) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் நன்றி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.