Breaking News
சபரிமலையில் மீண்டும் பதற்றம் : 144 தடை உத்தரவு

நாடு முழுவதும் புகழ் பெற்றது, சபரிமலை அய்யப்பன் கோவில். அங்கு இதுவரை இல்லாத வகையில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக இந்து மத அமைப்புகள் பலவும் போராட்டத்தில் குதித்தன. இந்த நிலையில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, கடந்த மாதம் 17–ந் தேதி திறக்கப்பட்டது. 22–ந் தேதி மூடப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெண்கள் பலரும் சபரிமலை அய்யப்பன் கோவிலை நோக்கி வந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை போராட்டத்தில் குதித்த பல்வேறு பக்தர் அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

பம்பை, சன்னிதானம், நிலக்கல், பிலாபள்ளி, லாஹா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவுக்கு நிலைமை மோசமானது.

இருப்பினும் பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பல இளம்பெண்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தல் வரை வந்தும், பலத்த எதிர்ப்பால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர்.

போராட்டம், வன்முறை காரணமாக 3 ஆயிரத்து 731 பேர் கைது செய்யப்பட்டனர். 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு, தலைமை பூசாரி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி ஆகிய இருவரும் சேர்ந்து நடை திறந்து, விளக்கு ஏற்றுவர்.
சிறப்பு பூஜைக்கு பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு விடும்.

இதையொட்டி சபரிமலையில் கடந்த முறையைப் போன்று பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், வன்முறைகள் நடைபெறாதபடிக்கு தடுப்பதற்கு கேரள அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளது.
சபரிமலை பகுதியில் கலவர தடுப்பு போலீசார் உள்பட 2 ஆயிரத்து 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 20 உறுப்பினர்களை கொண்ட அதிரடிப்படை கமாண்டோக்கள், சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பம்பை, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் கடந்த 3–ந் தேதி இரவு முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது 3 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

இதனால் சபரிமலை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்கக்கூடாது என்று ஊடகங்களுக்கு விசுவ இந்து பரி‌ஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டமைப்பான சபரிமலை கர்மா சமிதி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகை ஆசிரியர்களுக்கு கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன.
பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து, அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினால், அவர்களை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், சன்னிதானத்தில் பெண் போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பெண் போலீசார் குவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே சபரிமலையில் செய்தி சேகரிப்பதற்காக வந்த ஊடக வாகனங்களும், பத்திரிகையாளர்களும் நிலக்கல்லில் உள்ள பம்பை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது அறிவிக்கப்பட்டாத தடையாக அமைந்தது.

போலீஸ் டி.ஜி.பி., பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், சபரிமலையில் ஊடகத்தினருக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறினாலும், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள போலீசார், மேலிடத்தில் இருந்து வந்துள்ள வாய்மொழி உத்தரவுக்கு ஏற்ப பத்திரிகையாளர்களை திரும்பச்செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.
இதற்கிடையே மூத்த போலீஸ் அதிகாரிகளான உளவுத்துறை ஐ.ஜி. வினோத்குமாரும், சன்னிதான பாதுகாப்பு பொறுப்பு ஐ.ஜி. பி. விஜயனும் நேற்றே விடுமுறையில் சென்று விட்டதாகவும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மாநில அரசு வலுக்கட்டாயமாக அமல்படுத்தினால் மேலும் பலர் விடுமுறையில் செல்லக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்போது ஒரு நாள் மட்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டாலும், அடுத்து மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் மீண்டும் வரும் 17–ந் தேதி திறக்கப்படும்.
இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்கள் 13–ந் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.