Breaking News
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேட்டது. இதுதொடர்பான வழக்கில், இந்த பெயர்களை அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது.ஆனாலும், பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
ரிசர்வ் வங்கி இணையதளத்தில், தகவல் பெறும் உரிமை சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணைய கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வெளிப்படைத்தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மதிக்கவில்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மதிக்காமல், தகவல் ஆணையத்துக்கு தகவல் அளிக்காததற்கு நீங்களே (உர்ஜித் படேல்) பொறுப்பு என்று தகவல் ஆணையம் கருதுகிறது.
உங்களுக்கு ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கு 16–ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு இந்த நோட்டீசை அனுப்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல், வாராக்கடன்கள் பற்றி ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை தகவல் ஆணையம் கேட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.