Breaking News
நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை உயிரை மிச்சம் வைத்து, உடைமைகளை அள்ளசென்றது புயல் கிராம மக்கள் கண்ணீர்

‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டம் மதுக்கூர், பாப்பாநாடு, அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட கிராமங்கள் முழுவதிலும் உள்ள ஓட்டு வீடுகளையும், கூரை வீடுகளையும் சிதைத்து விட்டது. இந்த வீடுகள் மேற்கூரைகள் இன்றி காட்சி அளிக்கின்றன.
அங்கு வசித்து வந்த மக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாக்க திணறி வருகிறார்கள். தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என கண்ணீருடன் கூறினார்கள்.

இதுகுறித்து நெம்மேலியை சேர்ந்த மாரிமுத்து கூறியதாவது:- கஜா புயல் தென்னை மரங்களை அழித்து விட்டது. ஓட்டு வீடுகளுக்கும், கூரை வீடுகளுக்கும் சேதம் அதிகம். மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு நிலவுகிறது. அதன் விலையும் உயர்ந்து விட்டது. யாராவது மெழுகுவர்த்தி கொண்டு வந்து இலவசமாக வினியோகம் செய்வார்களா? என காத்திருக்கிறோம்.

அரிசி கிடைக்காததால், அக்கம்பக்கத்தினர் அளிக்கும் கூழை சாப்பிட்டு வருகிறோம். 11 வயதில் இதேபோல் ஒரு புயல் வீசியது. அதன் பிறகு தற்போது தான் பலத்த புயல் வீசி உள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கு அலைவதை பார்க்கையில் கண்ணீர் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பாப்பாநாடு வள்ளிக்கண்ணு கூறியதாவது:- புயலால் இவ்வளவு பாதிப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. ஓட்டு வீடுகளில் இருந்து ஓடுகள் விழுந்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பாத்திரங்கள் பறந்ததை பார்க்கும்போது திகிலாக இருந்தது. எனது வீட்டில் இருந்த 40 கிலோ அரிசி புயலுடன் பெய்த மழையால் வீணாகி விட்டது. ஒரு வாரமாக உணவுக்கு தவித்து வருகிறோம்.

கடந்த சில நாட்களாக மரவள்ளி கிழங்கை சமைத்து சாப்பிட்டு வருகிறோம். தெருவில் தான் வசித்து வருகிறோம். சர்க்கரை நோய் பாதித்தவர்கள் சாப்பாடு கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உயிரை மட்டும் மிச்சம் வைத்து விட்டு, உடைமைகள் முழுவதையும் புயல் அள்ளி சென்று விட்டது. உரிய நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் பகுதியில் ஏராளமானோர் புயலால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இருக்க இடமின்றி தவித்த அவர்களுக்கு அரசின் ஆதரவு கிட்டவில்லை. இதனால் வீடுகளை இழந்த மக்கள் அருகே உள்ள இடுகாட்டில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

புயல் தாக்கிய நாளில் இருந்து அவர்கள் இடுகாட்டிலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த பகுதியை காரில் கடந்து செல்லும் அதிகாரிகளும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து இடுகாட்டில் தங்கி உள்ள மக்கள் கூறியதாவது:-
இறந்த பிறகு வர வேண்டிய இடத்துக்கு இப்போதே எங்களை கஜா புயல் அழைத்து வந்து விட்டது. இடுகாட்டில் தங்கி உள்ள நாங்கள் தினமும் குழந்தைகளுடன் இங்கு விஷ ஜந்துக்களுடன் தங்கி அவதிப்பட்டு வருகிறோம்.

நாங்கள் தங்கியுள்ள பகுதியை தினமும் அரசு அதிகாரிகளின் கார் கடந்து செல்கிறது. ஆனால் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களின் இடுகாடு வாசம் தொடரும் என தெரியவில்லை. எனவே வீடுகளை இழந்த எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இதில் கந்தர்வகோட்டையை சேர்ந்த சங்கீதா தென்னரசு என்ற விவசாயி தென்னந்தோப்பில் மட்டும் 1,530 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி சங்கீதா தென்னரசு கண்ணீர் மல்க கூறியதாவது:-

வீரம்பட்டி என்ற இடத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரத்து 100 தென்னங்கன்றுகளை நட்டு முறையாக உரமிட்டு ஐந்தாண்டுகளாக பராமரித்து வந்தோம். ஒவ்வொரு மரத்திலும் இளநீர்கள் காய்த்து தொங்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் தான் கஜா புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,530 மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன.

பல லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரித்த தென்னை மரங்கள் ஒரே நாளில் தரையோடு சாய்ந்து விட்டன. இதனால் எங்கள் வாழ்வாதாரமே பறி போய்விட்டது. இந்த தென்னை மரங்களை உருவாக்க வேண்டுமானால் இன்னும் ஐந்தாண்டுகள் ஆகும். நாங்கள் பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்களின் முதல் பாளையில் குலை தள்ளிய இளநீரை கூட நாங்கள் பறிக்க முடியாமல் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.