Breaking News
பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு கூட்டு அறிக்கை எதுவும் இல்லை; 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மாமல்லபுரத்தில் நடைபெறும் “முறைசாரா உச்சிமாநாட்டில்” வர்த்தக பிரச்சினைகள், எல்லை மோதல்கள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்த விவாதம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்கள் வெளியிடும் கூட்டு அறிக்கை எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது உச்சிமாநாட்டின் முடிவுகளாக எந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தயாரிக்கப்படவில்லை என்று உச்சிமாநாட்டின் திட்டமிடலில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காஷ்மீர் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் விவாதங்கள் நடத்த இந்திய தரப்பு நம்பும் என்று அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக 129 தனியார்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

சீனா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 9 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்தது.

சீனாவில் இருந்து உரம், ரசாயனம் மற்றும் மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து வைரம், பருத்தி போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.

எனினும், ஏற்றுமதியைக் காட்டிலும் அதிக அளவில் சீன பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வதால் வர்த்தக சமநிலையற்ற தன்மை நீடித்து வருகிறது. 2018 – 2019 ஆண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5300 கோடி டாலராக இருந்தது.

இது குறித்து அவ்வப்போது சீனாவிடம் எடுத்துரைத்ததுடன், இந்தியாவிடம் இருந்து குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதை முன்னிட்டு இருநாடுகளுக்கு இடையிலான தொழில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

அதில் வர்த்தக உறவை வலிமைப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து வேளாண்மை, ஜவுளி, ரசாயனம், பிளாஸ்டிக், மருந்து உள்ளிட்ட துறை சார்ந்த பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் பேசிய சீன தூதரக அதிகாரி ஜூ சியாஹாங், வர்த்தக பற்றாக்குறையை சீர்செய்யும் விதத்தில் வர்த்தக வசதிகளை வலிமைப்படுத்த இந்தியாவும் – சீனாவும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நீண்ட காலமாக வர்த்தக சமநிலையற்ற தன்மை இருப்பது, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் பிரச்சனையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக சமநிலைக்காக பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்து வருவதாகவும், இந்தியாவில் இருந்து வேளாண் பொருட்களை சீனா இறக்குமதி செய்ய ஏற்கனவே ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களில் சீன நிறுவனங்கள் 800 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சீனாவின் வெளிநாட்டு வர்த்தக துறைக்கான துணை இயக்குனர் லியு சங்யு, அடுத்த 15 ஆண்டுகளில் 30 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சேவைகளை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 9 மாதங்களில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 1.6 சதவீதம் அதாவது 3800 கோடி டாலராக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு சீனாவின் வூகானில் பிரதமர் மோடி – அதிபர் ஜின்பிங் இடையே நடந்த சந்திப்பை அடுத்து அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள சீனா ஒப்புக் கொண்டது. இதே போன்ற வர்த்தக நல்லுறவை தொடரும் வகையிலான நடவடிக்கைகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பின் போது மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா தூதரகத்தின் ஆலோசகர் ஜு சியாவோங் கூறும் போது :-

நாடுகளுக்கு இடையிலான பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வு பொருளாதார ஒத்துழைப்பைத் தொந்தரவு செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.

அதை தெளிவுபடுத்துவதற்காக, சீனா ஒருபோதும் வர்த்தக உபரியை வேண்டுமென்றே பின்பற்றவில்லை. சீரான வர்த்தகம் நிலையானது மற்றும் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்பதை சீனா முழுமையாக அறிந்திருக்கிறது என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.