வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: 2015 க்கு பிறகு என்ன செய்தீர்கள்…? ஐகோர்ட் கேள்வி
சென்னை
சென்னையில் கடந்த 6-ந்தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து வெள்ளக்காடாக்கியது. ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், மழைநீர் சூழ்ந்தது.
மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும் கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டில், சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், சாலைகளை அகலப்படுத்தும்போது மழைநீர் வடிகால் போன்ற முறையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை, அதேபோல் கழிவுநீர் செல்வதற்கும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை பாடமாக வைத்தே பருவமழையை சமாளிக்க முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட்டு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதிகாரிகள் ஏதும் கற்றுக்கொள்ளவில்லையா? கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்துகொண்டிருந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2015 பெருவெள்ளத்தில் சந்தித்ததைபோலத்தான் சென்னை மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்த நீதிபதி, பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படும் நிலைமை உள்ளது என்று குறிப்பிட்டார். சென்னை பெருநகரில் ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகும் என நம்புவதாக தெரிவித்த அவர், நிலைமை சீராகாவிட்டால், ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் என்று கூறியுள்ளார்.