Breaking News
இலங்கையில் விறகுகளாக விற்கப்படும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்….!
கொழும்பு,
இலங்கைக் கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட  விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை ஏலம் விடப்பட்டது.
அதில் 130க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தால், பழுது பார்க்க முடியாத நிலையில் இருந்தன. அவைகள் யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் உள்ள திறந்தவெளி பணிமனையில் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இலங்கையில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள் உடைக்கப்பட்டு, ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பும், வேதனையும்  தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.