Breaking News
அரிசி, கோதுமை, தயிருக்கு 5% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது: 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு

புதுடெல்லி: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு உள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய 2 தேதிகளில் நடந்தது. இதில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவானது. அதன்படி, புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், முன்கூட்டியே லேபிளிடப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர்,அரிசி உள்ளிட்ட சில்லறை பொருட்கள் மீது 5%, காசோலைகள் வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18%, மருத்துவமனையில் அறை வாடகை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) நோயாளி ஒருவருக்கு, நாளொன்றுக்கு ரூ.5000க்கு மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5 %,  அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டது.

இது தவிர, தங்கும் விடுதிகளின் வாடகை நாளொன்றுக்கு ரூ.1000 ஆக இருத்தல், எல்இடி விளக்குகள், சாதனங்கள், கத்திரிக்கோல் உள்ளிட்ட தையல் சார்ந்த பொருட்கள், பென்சில், ஷார்ப்னர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடிஸ் ஸ்கிம்மர்கள், கேக் ஆகியவற்றின் மீது தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரித்து நிலையங்கள் மற்றும் மயான பணி ஒப்பந்தங்கள் போன்ற சில சேவைகளுக்கும் தற்போதைய 12%ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் செய்யப்படும் ராணுவ கொள்முதல், ராணுவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வரிமாற்றம் இன்று அமலுக்கு வந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.