Breaking News
சின்னசேலத்தில் மாணவி சாவை கண்டித்து போராட்டக்காரர்கள் திடீர் கலவரம்: 144 தடை உத்தரவு

பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்
* போலீஸ் வேன், பள்ளி வாகனங்களுக்கு தீவைப்பு
* டிஐஜி, எஸ்பி உள்பட 52 போலீசார் படுகாயம்
* பள்ளி முதல்வர், தாளாளர் கைது

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். பள்ளி கட்டிடம், போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கல்வீசி தாக்கியதில் டிஐஜி, எஸ்.பி உட்பட 52 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி சாவு தொடர்பாக பள்ளி  முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி(17) என்ற மாணவி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவருடைய தந்தை ராமலிங்கம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக்குமார், கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் போலீசார் வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் செல்வி புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சின்னசேலம் புறவழிச்சாலையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பினர். கடந்த 2 நாட்களாக பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை என்று கூறி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு ஆகிய இடங்களில் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த பள்ளிக்கு விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் சென்று பார்வையிட்டு, டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர் அமைப்பினர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பினர். இதையடுத்து நேற்று காலை டிஐஜி பாண்டியன் தலைமையில் எஸ்பி செல்வக்குமார், ஏடிஎஸ்பி விஜய் கார்த்திக்ராஜ், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், திருமால் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி வளாகம், கனியாமூர் கூட்ரோடு ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில்ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோஷமிட்டவாறு பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது. பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் பேரிகார்டு மூலம் தடுத்து நிறுத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் போலீசாரை கல்வீசி தாக்கினர். இதனால்,  போலீசாரும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வேனுக்கு தீ வைத்தனர். இதில் வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் ஆத்திரம் அடங்காத போராட்டக்காரர்கள் பள்ளி முன்பு நின்றிருந்த போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து வளாகத்தில் நிறுத்தியிருந்த பள்ளி பஸ்கள், கார், டிராக்டர், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவைகளை தீவைத்து எரித்தனர்.

மேலும் வளாகத்தில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களையும் விட்டுவைக்கவில்லை. அவற்றையும் தீக்கிரையாக்கினர். பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பள்ளி கேட், அலங்கார வளைவு ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்தும் நொறுங்கியும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் இருந்ததால் 150க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. முதலில் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். இதனால் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. அவர்களை போலீசார் ஓட ஓட விரட்டினர். அதேசமயம் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். விழுப்புரம் எஸ்பியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் வந்த வாகனத்தின்மீதும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு பல மணி நேர முயற்சிக்கு பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கல்வீச்சு சம்பவத்தில் டிஐஜி பாண்டியனுக்கு தலையிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக்குமார், ஏடிஎஸ்பி விஜய்கார்த்திக்ராஜ் ஆகியோருக்கு காலிலும், கலால் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்ளிட்ட 49 போலீசாரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேற்று சம்பவம் நடந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் எஸ்பி சைலேந்திரபாபு கூறுகையில், மாணவியின் மரணத்திற்கு காரணமான அந்த விடுதியில் போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13ம் தேதி நடந்த மாணவி சாவு தொடர்பாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து  கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் சின்னசேலம் தாலுகாவில், சின்னசேலம் மற்றும்  நைனார்பாளையம் குறுவட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

* குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவ குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். எனவே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 19 பஸ்கள் தீக்கிரை 1000 போலீஸ் குவிப்பு
19 பள்ளி பஸ்கள், 2 பொக்லைன் இயந்திரம், தண்ணீர் லாரி, டிராக்டர், ஒரு நிருபர் மற்றும் 29 போலீசாரின் பைக்குள் தீக்கிரையாயின. பள்ளியில் அனைத்து வகுப்பறைகளும் அடித்து தேசப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதனால் வகுப்பறைகளை சீரமைத்து பள்ளி தொடங்க 4 மாதம் ஆகும். 4 ஆயிரம் மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியானதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், கடலூர், திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநகு, சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ் ஆகியோர் லேசான காயமடைந்து முதலுதவி சிகிச்சைக்குப்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சின்னசேலம், திருச்சி ஐஜி சந்தோஷ்குமார், வேலூர் எஸ்பி நாகேஸ்கண்ணன், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திக் ராஜ் தலைமையில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

* போக்குவரத்து நிறுத்தம்
கள்ளக்குறிச்சி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் புறவழிச்சாலையில் அந்த பள்ளி உள்ளதாலும், போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவதாலும் அசம்பாவிதத்தை தடுக்க, சின்னசேலம், கள்ளக்குறிச்சி இடையே பஸ்கள் நிறுத்தப்பட்டது. மேலும், சின்னசேலம்-கச்சிராயபாளையத்துக்கும் பஸ்கள் மாற்றி விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின.

* கனியாமூர் கிராமமே புகைமண்டலம்
போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் முதலில் போலீஸ் வேனுக்கு தீவைத்தனர். வேன் எரிந்து டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. மேலும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த  பள்ளி பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைத்து எரித்ததால் கனியாமூர் கிராமமே கரும்புகை மண்டலமானது. வகுப்பறையிலும் தீவைப்பு சம்பவத்தால் பொருட்கள் எரிந்து நாசமானது.

* மாணவியின் தாய் உருக்கமான வேண்டுகோள்
இறந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, ‘‘எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நாங்கள் அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புகிறோம். என் மகளின் சாவுக்கு நியாயம் கேட்டு போராடும் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே மாணவியின் தந்தை ராமலிங்கத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாலும், தாய் செல்வி மிகுந்த அதிர்ச்சியில் இருந்ததாலும் இருவரும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவியின் தாய் செல்வி அளித்த பேட்டியில், பள்ளியில் நடந்த வன்முறைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. எங்களது மகளின் சாவில் நீதி கிடைக்க வேண்டும். சாவுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

* போலீஸ் வாகனத்தை கொளுத்தியது எப்படி?
சாலையில் நின்ற போலீஸ் பஸ்சை போராட்டக்காரர்கள் கும்பலாக சுற்றினர். டீசல் டாங்கில் சிலர் தீ வைத்தனர். சிலர் முன்பக்க கதவை திறந்து டிரைவர் இருக்கைக்கு அடியில் துணிகள் மற்றும் பேப்பர்களை போட்டு தீ வைத்தனர். இன்னும் சிலர் பின்பக்க டயரை எரித்தனர். இதனால் போலீஸ் வாகனம் முழுவதுமாக கொழுந்துவிட்டு எரிந்தது.

* சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விசாரணை: எஸ்பி செல்வகுமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வகுமார் கூறுகையில், மாணவி உயிரிழந்தது குறித்து என்னென்ன சந்தேகம் உள்ளதோ அனைத்தும் விசாரணைக்கு கொண்டு வரப்படும். ஆசிரியர் மற்றும் வாட்ச்மேனிடம் விசாரணை செய்ததில் மாணவி உயிரிழப்பற்கு முன்பே சுவரில் கரை இருந்ததாக தெரிவித்துள்ளனர். மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முதல் நாள் மாலை முதல், மாணவியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வேனில் அழைத்து செல்லும் காட்சிகள் வரை பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. மாணவியால் எழுதப்பட்ட கடிதத்தை அவரது தாய் உண்மையில்லை என மறுக்கிறார். அந்த கடித நகல்களை கொண்டு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் படித்து காண்பிக்கப்பட்டது. கடிதம் விசாரணை அதிகாரியிடம் உள்ளது. கையெழுத்து குறித்து பள்ளியில் பயின்றபோது எழுதப்பட்ட நோட்டுகளை கொண்டு முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார். மாணவி உயிரிழந்து நேற்று வரை 5 நாட்கள் ஆகிறது. ஆனால் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* பள்ளி பொருட்களை தூக்கி சென்றனர்
தனியார் பள்ளியில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்கள் சிலர் வகுப்பறையில் இருந்த விளையாட்டு பொருட்கள், சேர், பெஞ்சு, டேபிள், மோட்டார், கணினி பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். கனமான பொருட்களை தங்கள் பைக்கில் வைத்து எடுத்து சென்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.