
தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பாலத்திற்கு அடியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த எச்சரிக்கை பலகையும் சுரங்கப்பாவையின் அருகே வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரி ஒன்று இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தூத்துக்குடி செல்வதற்கு முயன்றுள்ளது. ஆனால் கண்டெய்னர் லாரி சுரங்க பாதையில் சிக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், சுரங்க பாதையில் மேல் பகுதியில் சிக்கி நின்றிருந்த கண்டெய்னர் லாரியை மீட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவருக்கு தமிழ் தெரியாது என்பதால் ரயில்வே சுரங்கப் பாதை அருகே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் எழுதியது தனக்கு புரியவில்லை என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.