
திருச்செந்தூரில் தங்கை பிறந்த நாளுக்கு இனிப்பு வாங்கச் சென்ற அண்ணன்- தங்கை கண்முன்னே கோரவிபத்தில் சிக்கி படுகாயம்
தி ருச்செந்தூர்- திருநெல்வேலி சாலை குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் சௌந்தரபாண்டி (22). இவரது தங்கை சௌந்தர்யா. சௌந்தர்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் எனது தங்கைக்கு சாக்லேட் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பியுள்ளார்.
அப்போது, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த TN12-Z- 9968 என்ற நம்பர் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்து சௌந்தரபாண்டி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரபாண்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்ட தங்கை சௌந்தர்யா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு திருச்செந்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காரை மடக்கிப்பிடித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காரில் இருந்து இறங்கிய போதை ஆசாமிகள் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முனியசாமி (29) என்பவரை விசாரணைக்காக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
படுகாயமடைந்த சுதந்திரபாண்டி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து பொதுமக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்னர், விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் பொதுமக்களிடம் தகராறு செய்த காரில் வந்த போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக பேசியதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதியில் ஏற்கனவே விபத்து நடந்து வந்த நிலையில், தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு, வேகத்தடை மற்றும் முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல், இந்த பகுதியில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்து மீண்டும் விபத்து நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கை பிறந்தநாளுக்கு தங்கைக்காக சாக்லேட் வாங்க போன அண்ணன், தங்கை கண்முன்னே கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் – சதீஷ்