
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வரும் போலி பத்திரிகையாளர்கள் – நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்.!.
நாட்டின் நான்காம் தூண்களாக போற்றப்படுபவரகள் பத்திரிகையாளர்கள். இவர்கள் தனக்கென்று பாராமல் தன்னலம் இன்றி சமூகத்தில் அரங்கேறும் அவலநிலைகளை ஓடோடி சென்று துணிச்சலுடன் செய்திகளை சேகரித்து, குறைந்த வருவாயிலும், நிறைந்த மனதுடன் சமூக அக்கறையுடன், சமூகத்திற்காக பணியாற்றி வருபவர்கள் பத்திரிகையாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு, பகலாக மழை, வெயில் பாராமல் அர்ப்பணிப்போடு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உணவு, தூக்கம் மறந்து பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் “பத்திரிக்கையாளர்கள்” என்ற போர்வையில் செய்தியை பற்றி ஒரு துளிக்கூட தெரியாத, வேறு பணி செய்துவரும் போலியான நபர்கள், போலி நிறுவனங்களிடம், போலி அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டு, அதை வைத்துக்கொண்டு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பல்வேறு நிறுவனங்களிடமும், அரசு சார்ந்த அலுவலகங்களிலும் மிரட்டுவதும், மிரட்டி பணம் வசூல் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இந்த செயல், அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் செயலாகவும், வேதனைப்படுத்துவதாகவும் உள்ளது.
மேலும், அவர்கள் செய்கின்ற குற்றச்செயல்களை மறைப்பதற்காகவும், தங்களை பத்திரிகையாளர் என்று அடையாளம் காட்டுவதற்காகவும் காவல்துறையினரிடம் இணக்கமாக இருப்பதற்காக முயல்கின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகளுடன் நட்பு ரீதியாக பழகும் காவல் துறையினரையும் கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.
மேலும், தனக்கென்று வாட்ஸ் அப் குழுக்களை அமைத்துக் கொண்டு அதில் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் காவல் துறையை சேர்ந்த நபர்களை இணைத்துக் கொண்டு தன்னுடைய வாட்ஸ்அப் குழுவில் அவர்களை அடையாளம் காட்டிக் கொண்டு, அதில் போட்டோவுடன் ஒரு சில தகவல்களை பதிவிட்டு தாங்களும் செய்தி பதிவிடக் கூடிய செய்தியாளர்கள் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். மேலும், தங்களுடன் அரசியல் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு பயந்து என்ன சொன்னாலும் கேட்பார்கள் எனவும் கூறிக் கொண்டு அலைகின்றனர்.
உண்மையாக உழைக்கும், அனைவராலும் மதிக்கக் கூடிய மற்றும் பாராட்டக் கூடிய பத்திரிகையாளர்கள் இடத்தை இந்த போலி பத்திரிகையாளர்கள் அடைவதற்காக பல்வேறு தில்லுமுல்லுகளையும் செய்தும் வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் போலியாக “PRESS” என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதால் தங்களுடைய வாகனங்களை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அதில் சட்டவிரோத பொருட்கள் கடத்தவும் வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனிக் கவனம் செலுத்தி போலியாக அலைந்து திரியும், போலி பத்திரிகையாளர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் மீதும் மற்றும் அவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக அடையாள அட்டை வழங்கிய அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதன் மீது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இவர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகமாகி சட்ட ஒழுங்கு சீர்கெடும் சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
“விரைந்து நடவடிக்கை எடுக்குமா.? மாவட்ட நிர்வாகம்.!.”.
“எதிர்பார்ப்பில் (உண்மை) பத்திரிகையாளர்கள்”