
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளில் 500 புதிய சாலைகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரமானது அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஜவுளி துறை, அனல்மின்நிலையம், கெமிக்கல் நிறுவனங்கள், உரத்தொழிற்சாலை மற்றும் பல்வேறு பர்னிச்சர் பார்க், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து வசதிகளும் அடங்கிய மாநகராக தூத்துக்குடி விளங்குவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகனப் பெருக்கமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரான தூத்துக்குடி மாநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகர்புற கட்டமைப்பு வசதிகளை அனைத்து பகுதிகளுக்கும் செய்து கொடுக்கும் கடமை மாநகராட்சிக்கு உண்டு.
மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இந்த நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு, இந்திய அளவில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாம் பரிசு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பரிசை பெற்றார். அதற்கு முன்பாக இந்திய அளவில் மாசு இல்லாத மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பிரின்ஸ் ராஜேந்திரன், செயற்பொறியாளர் திட்டம் ரங்கநாதன், கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர் பாண்டி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சியின் பல பகுதிகளில் உள்ள இடங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கிடந்தன. இதையெல்லாம் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, எங்களோடு கவுன்சிலர்கள் இணைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை இனங்கண்டு, அவற்றை கையகப்படுத்தி, சில இடங்களில் மாநகராட்சி பூங்கா அமைத்துள்ளோம். இதனால் மாநகர மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.
பூங்காக்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தை பேண முடிகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான 60 வார்டு பகுதிகளிலும் அசூர வேகத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். ஒரு சில இடங்கள் தாழ்வாக இருப்பதால் அதனை வருங்காலங்களில் திட்டமிட்டு மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உருவாக்கி பணிசெய்வோம். மடத்தூர் சாலை முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையின் இருபுறமும் இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல 798 புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் தூசு இல்லாமல் அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சி மூலம் இதுவரை சுமார் 2½ லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெகிலி கழிவுகளை தவிர்க்கும் பொருட்டு, தனியார் பங்களிப்புடன் மஞ்சள் பை திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 2 லட்சம் மஞ்சள் பைகள் வழங்கியுள்ளோம். மேற்கண்ட இரண்டையும் முறையாக அனைவரும் பின்பற்றினால் எல்லோருமே நலமாக வாழலாம். தூத்துக்குடி மாநகராட்சியை சுற்றிலும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால், வீடுகள் தோறும் மரம் வளர்ப்பது அத்தியாவசிய அவசியமாய் உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஏற்கனவே மழை காலத்திற்கு முன்பு 1500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. கழிவுநீர் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் எதிர்பாராத அதிகமழையால் எல்லோருக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்திலும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூத்துக்குடிக்கு பல மாவட்ட அமைச்சர்கள் அதிகாரிகளை அனுப்பி தலைமைச் செயலகத்தை இங்கு மாற்றினார். அந்த அளவிற்கு பணிகள் நடைபெற்ற போது, எம்.பி., அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் முழுமையாக ஒத்துழைத்தார்கள். இதனால் மக்கள் விரைவாக வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டனர். இந்நிலையில் வரும் 5ம் தேதி 60 வார்டு பகுதிகளிலும் 500 புதிய சாலைகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் துவங்க உள்ளன. ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் நல்ல முறையில் விரைவாக பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் தூத்துக்குடி மாநகராட்சி நிலைக்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.