
தூத்துக்குடியில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை- 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி 4-கேட் அருகேயுள்ள போல்பேட்டை மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஹரிபாலகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொக்கன் நாயக்கர் மகன் ஜெயராஜ். இவர் திருநெல்வேலியில் உள்ள அவரது (மகன்) பேரனுடைய பிறந்த தினத்திற்காக கடந்த மார்ச் 1- ம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையறிந்த கொள்ளையர்கள் நேற்றிரவு வீட்டிற்குள் ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், பூஜை அறையில் இருந்த விலையுயர்ந்த பொருள்கள், செல்போன், ஏடிஎம், பணம் மற்றும் நகை திருடு போயிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆராய்ந்து வருகின்றனர்.
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் கொள்ளை அடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் தப்பிச்சென்ற 3 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.