பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானிஸ்தான் எல்லையில் சீனா பாதுகாப்பை அதிகரித்தது
சீனாவிற்கு பயங்கரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சீனா பாதுகாப்பை அதிகரித்து உள்ளது.
பயங்கரவாத எச்சரிக்கையானது உயர்ந்து வரும் நிலையில் சீனா இந்நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உஜ்குர் என்னும் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இந்த மாகாணம் மத்திய ஆசியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அமைந்து உள்ளது. உஜ்குர் மக்கள் நீண்ட காலமாக தாங்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரி போராடி வருகின்றனர். தங்களுடைய லட்சிய நாட்டுக்கு கிழக்கு துர்கிஸ்தான் என்றும் இவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.
உஜ்குர் மக்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் மறைமுகமாக உதவி வருகின்றன. இதனால் அங்கு அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்களும், போலீசாருக்கு எதிரான தாக்குதல்களும் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம் ஷின்ஜியாங் மாகாணத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மாகாணத்தில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற்று, சட்டவிரோதமாக சீனாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக இவர்கள் நுழைந்து விடுகின்றனர் என்பது சீனா தரப்பு குற்றச்சாட்டாகும்.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம் 8 நாடுகளை எல்லையாக கொண்டு உள்ளது. இவற்றில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானிஸ்தானும் அடங்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான சீனாவின் முக்கியமான போர்க்களமாகும். சீனா மீண்டும் தன்னுடை கள்ளத்தனத்தை வெளிப்படுத்திஉள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லையென்று சீனா கூறிஉள்ளது அதனுடைய அறிக்கையில். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா – பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் ‘சி.பி.இ.சி.’ திட்டத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு ராணுவத்தை ஏவிவிடுகிறது. இதற்கிடையே சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது சீனா தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்தியாவிற்கு எதிர்ப்பு என்ற பெயரில் சீனாவுடன் கைகோர்த்து கொண்டு உள்ள பாகிஸ்தான் அதனுடைய சொல்லைக்கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு உள்ளது. சீனாவிடம் இருந்து கடும் அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இப்பகுதியில் சிறப்பு ராணுவ நடவடிக்கையையும் பாகிஸ்தான் மேற்கொண்டு உள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடைவிதிக்க ஐ.நா.வில் இந்தியா போராடி வருகிறது. அதற்கு முட்டுக்கட்டையிட்டு வரும் சீனாவில் சமீபகாலமாக வெளிப்படையாகவே பயங்கரவாத தாக்குதல் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி