
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடீர் ஆய்வு.- திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வடை மற்றும் திண்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிப்பு- பான்மசாலா வைத்திருந்த கடைக்கு சீல்- நியமன அலுவலர் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர், புகார் ஒன்றின் அடிப்படையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் இன்று (08.03.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பண்டங்கள் திறந்தவெளியில் உள்ளனவா, உணவுப் பொருட்களை விநியோகிக்க அச்சிட்ட காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றதா, உரிமம் உள்ளதா போன்ற அம்சங்களில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும், 1 கிலோ அனுமதியற்ற ப்ளாஸ்டிக்கும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், பாலம் என்ற தேநீர் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா 78 கிராம் மட்டும் கண்டறியப்பட்டது. எடை குறைவாக இருந்தாலும், தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றம் குறித்தான தொடர் விசாரணைக்காக, அக்கடையானது உடனடியாக மூடப்பட்டது.
ஒரு பாக்கெட் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருளை விற்பனைக்கு உணவு வணிகர்கள் வைத்திருந்தாலும், அவர்களின் கடையானது உடனடியாக மூடப்பட்டு, 14 தினங்களுக்குப் பின்னரே கடை திறக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது. பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைக்கக்கூடிய இம்மாதிரியான விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படமாட்டது என்று அறிவிப்பதுடன், எவருக்கும் சலுகையும் கிடையாது, கருணையும் காண்பிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அறிவிக்கப்படுகின்றது.
மேலும், எக்காரணம் கொண்டும் நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்கள் அல்லது அனுமதியற்ற ப்ளாஸ்டிக்குகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிட/விநியோகிக்கப் பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கப்படுகின்றது. மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், இதுத்தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கடுமையாக எச்சரித்துள்ளார்

