சிபிஐ, அமலாக்கப்பிரிவு அழுத்தம் காரணமாகவே மாயாவதி அஜித் ஜோகியுடன் கூட்டணி – காங்கிரஸ்
பா.ஜனதா ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக சத்தீஷ்கார் மாநிலத்தில் மாயாவதி, காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் கூட்டணி என அறிவித்துள்ளார்.
அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணியை அறிவித்த மாயாவதி, வெற்றிப்பெற்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என்றும் அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் 35 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் 55 தொகுதிகளில் போட்டியிடும் என கூறியுள்ளார் மாயாவதி. எஸ்.சி. மற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்காக எங்களுடைய கூட்டணி பணியாற்றும் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி வாக்குகளை பிரிக்கும், காங்கிரசுக்கு பின்னடைவாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது. மாயாவதியின் இந்நகர்வை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் ஜனதா காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னணியில் பா.ஜனதா ஆதரவு உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சத்தீஷ்காரில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி தன்னுடன் கூட்டணி வைக்கும் என மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு எதிர்மறையாக அங்கு நகர்வு ஏற்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை முகமைகளில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே பகுஜன் சமாஜ், ஜனதா காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதாவின் ஆதரவுடன் இந்த கூட்டணி அமைக்கப்படுகிறது. மாநில மக்கள் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் புபேஷ் பாகேல் கூறியுள்ளார். பா.ஜனதாவின் உத்தரவிற்கு இணங்க பகுஜன் சமாஜ் மாநிலத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.