‘ஏடீஸ்’ கொசுக்கள் மூலம் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது அரசு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சைக்கு அனுமதி
தமிழகத்தில் பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ‘ஏடீஸ்’ எனப்படும் ஒரு வகை கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு சம்பவமும் நடந்தன. இந்தநிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 2 பேர், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உட்பட 17 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த ரத்த பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.