தூத்துக்குடியில் வங்கி ஊழியர் மீது தாக்குதல், இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் வங்கி ஊழியர் மீது தாக்குதல், இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் தனியார் வங்கி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருபவர் ஜெரின் ஜெயராஜ். இவருக்கும் மெர்லின் ஷெர்லி ரூபா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவீட்டாருக்கும் இடையே சமீப காலமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி வங்கி பணி நிமித்தமாக தூத்துக்குடி மார்க்கெட் அண்ணா சிலை அருகில் ஜெரின் ஜெயராஜ் மற்றும் வங்கி மேலாளர் ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்த போது, ​​மெர்லின் ஷெர்லி ரூபாவின் மாமா சேகர் என்பவர் வாகனத்தில் இறங்கி வந்து, ஜெரின் ஜெயராஜ் கண்ணத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த திடீர் தாக்குதலில் ஈடுபட்டதோடு அருகிலிருந்த வங்கி மேலாளர் சதிஷ் என்பவரையும் தாக்க முற்பட்டு அவதூறான வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அருகில் உள்ளவர்கள் சத்தம் போடவே, சேகர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதையடுத்து, ஜெரின் ஜெயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 19ம் தேதி வீடு திரும்பிய நிலையில் 20ம் தேதி மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசனிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளியான சேகரை தேடி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )