திமுகவிற்கு ஆதரவாக எங்கு சென்றாலும் எம் மக்களிடம் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது

திமுகவிற்கு ஆதரவாக எங்கு சென்றாலும் எம் மக்களிடம் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது

திமுகவிற்கு ஆதரவாக எங்கு சென்றாலும் எம் மக்களிடம் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், பசுபதி பாண்டியனின் மகளுமான சந்தனபிரியா திட்டவட்டம்

தேவேந்திரகுல மக்கள் மத்தியில் ஜாண் பாண்டியன், பசுபதி பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை இம்மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த எம்.பி தேர்தலில் ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் இருந்து தேவேந்திரகுல மக்களை நீக்கி தனியாக கொண்டு வரவேண்டும் என்று கிளம்பிய சர்ச்சையில் கீதாஜீவன், சைவ வேளாளர் மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டியதாக ஓர் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இது இம்மக்கள் மத்தியில் தீ போல பரவியதால் சென்றமுறை கனிமொழி ஓட்டு கேட்டு போகிற இடத்தில் கீதாஜீவனை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போதைய மக்களவை தேர்தலில் ஜாண் பாண்டியன் பா.ஜ.க-வையும், பசுபதி பாண்டியன் சார்ந்த அமைப்பும், கிருஷ்ணசாமியும் அதிமுக-வுக்கும் ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவை அவர் சார்ந்த பகுதிகளிலுள்ள சமுதாய மக்கள் வரவேற்கவும். இதனால் இவர்கள் பிரச்சார களத்திற்கும் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில், தேவேந்திரகுல அமைப்புகள் யாருமே திமுகவிற்கு ஆதரவளிக்காததால், பசுபதி பாண்டியன் சார்ந்த அமைப்பை உடைக்க திட்டமிட்டு, அதை சரியான முறையில் செய்து ஒரு தரப்பை திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கீதா ஜீவன் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பை பசுபதி பாண்டியன் நடத்தி வந்தார். இவரது மறைவுக்கு பிறகு இந்த அமைப்பை அவரது உடன் பிறப்பான பார்வதி சண்முகச்சாமியை பொதுக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒன்று கூடி தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்தனர். இவரும் சுமார் 11 ஆண்டுகளாக இந்த அமைப்புக்கு பொதுச்செயலாளராக இருந்தார். ஆனால் இந்த அமைப்பை அவரால் வளர்க்க முடியவில்லை. பிரச்சனைகள் ஏற்படக்கூடிய இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முடியவில்லை, நல்லது கொட்டுவதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பார்வதி சண்முகச்சாமி மீது ஏற்பட்டதால் நிர்வாக பொறுப்பாளர்கள் இவர் மீது அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், பசுபதி பாண்டியன் மீது பற்றுக் கொண்ட மக்களும், இளைஞர்களும் இவர்களின் தலைமை மீது வெறுப்புக்குள்ளானார்கள். இந்த தேவேந்திரகுல கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர்கள், தலைமை பொறுப்பாளர்கள் ஒன்று கூடி பசுபதி பாண்டியனின் மகளை ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இந்த நாள் முதல் பசுபதி பாண்டியனின் மகள் சந்தனப்பிரியா தேவேந்திரகுல மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சுற்று பயணம் செய்ய தொடங்கினார்.

*எனது தந்தை விட்டுச் சென்ற பணியைத் தொடர விரும்புவதாகவும் இம்மக்கள் மத்தியில் தெரிவித்தார்* இவரது செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட அந்த மக்கள் சந்தனபிரியாவை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இவரது செயல் நீண்ட நெடுங்காலம் கொண்டு செல்ல முடியாது என்றும், இந்த அமைப்பை மீண்டும் நம்வசம் சந்தனபிரியா தந்துவிடுவார் என்றும் எதிர்பார்த்து காத்திருந்த பார்வதி சண்முகச்சாமிக்கு இந்த அமைப்பு வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் சந்தனபிரியா தொடர் பயணமாக அனைத்து ஊர்களிலும் தனது கால் தடத்தை பதித்து விட்டார். இதன் மூலமாக தங்களது கூட்டமைப்பின் ஒப்புதலோடு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து நான் பிரச்சாரத்துக்கு தயார் எனவும் உறுதி அளித்தார்.

இதைத்தெரிந்து கொண்ட பார்வதி சண்முகச்சாமி எதிர்க்க முடியாமல் தினறிக் கொண்டு இருந்தபோது, ​​கீதா ஜீவன் ஆதரவாளர்கள் மூலமாக இவருக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பிற்காக காத்திருந்த பார்வதி அம்மையார் எதார்த்தமாக கனிமொழியை சந்தித்து திமுகவுக்கு தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு ஆதரவு தருவதாக கூறியுள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவு என்பதை காட்டிலும், தூத்துக்குடி தொகுதிக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஆதரவு கனிமொழிக்கு வேண்டும் என்பதால் இதை செய்ய விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க-வுக்கும், அதிமுகவுக்கும் இரண்டு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தபோது திமுகவுக்கு மட்டும் இந்த சமுதாய அமைப்பு ஆதரவு இல்லை என்றால் இந்த ஓட்டு நமக்குக் கிடைக்காது என்பதை கனிமொழி உறுதிபடுத்திக் கொண்டதால், பார்வதி சண்முகச்சாமி மூலமாக நிறைவேற்றி உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஒரு அமைப்பை தனது ஆளுமையால் இரண்டாக பிரித்து திமுகவுக்கு ஆதரவு தேடுவது வெட்கக் கேடானது என்று இம்மக்கள் கூறுகின்றனர். பார்வதி சண்முகச்சாமியால் தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதி வாழ் மக்களிடையே ஒரு ஓட்டை கூட திமுகவுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர், பார்வதி சண்முகச்சாமி விலை பேசப்பட்டு இருக்கலாமா.!. என்ற சந்தேகமும் இம்மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இது குறித்து, பொதுச்செயலாளர் சந்தனபிரியாவிடம் கேட்டபோது,

பசுபதி பாண்டியன் எனது தந்தை என்று அடையாளப்படுத்துவதை காட்டிலும், எங்கள் சமுதாய தலைவர் என்று சொல்வதையே நான் பெருமை கொள்கிறேன். கடந்த காலங்களில் தேவேந்திரகுல சமுதாயம் எந்த வளர்ச்சியையும் பெறமுடியாமல் முடங்கி கிடந்தது. சமுதாய இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், முடங்கி கிடக்கும் எங்கள் சமுதாயத்தை மீட்டெடுக்கவும் எங்கள் தலைவர் பசுபதி பாண்டியன் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். அதற்காகவே தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு என்ற ஓர் புதிய சமுதாய அமைப்பையும் உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலமாக கிராமம் கிராமமாக சென்று எம் சமுதாய மக்களை நேரில் சந்தித்து அவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும், புதிய புரட்சியையும் செய்தார். இதன் காரணமாக எங்கள் தலைவர் எம் மக்களின் மத்தியில் நீங்காத இடம் பெற்று புகழ் பெற்றார்.

இந்த சூழ்நிலையில் அவரது மரணம் எங்களுக்கு நீங்கா துயரத்தை ஏற்படுத்தியது. இந்த துயரத்தை மறைக்கவும், எம் மக்களுக்கு நல்லதொரு பாதுகாப்பை வழங்கவும் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பை தொடர வேண்டிய கட்டாயம் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுக்கு ஏற்பட்டது. இந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்கள் தற்காலிக பொதுச்செயலாளராக எனது தந்தையின் சகோதரி பார்வதி சண்முகச்சாமியை நியமனம் செய்தனர். . இவர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் சமுதாய மக்களிடையே எந்த நல்லுறவையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்த அமைப்பின் பொறுப்பாளர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. எம் மக்களின் நல்லது கெட்டதில் கூட கலந்து கொள்ளவில்லை. ஆக மொத்தம் தலைவர் பசுபதி பாண்டியனின் வழித் தடத்தில் இவர் பயணிக்க தெரியாததால் இந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பை வழிநடத்தும் சமுதாய பெரியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி, ஒரு மனதாக என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இதன்படி தற்காலிக பொதுச்செயலாளர் நீக்கப்பட்டார். அதன் பிறகு இவர் இந்த அமைப்பு சார்ந்த நிகழ்விலோ, நிர்வாகப் பொறுப்பாளர்களுடனோ எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் ஒதுங்கி கொண்டார்.

மேலும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் எங்கள் தலைவரின் வழியில் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணியை நான் ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று மீண்டும் தொடர்ந்தேன். எம் மக்களும் என்னை மனதளவில் ஏற்றுக்கொண்டனர்.

நம் சமுதாய முன்னோர்களின் கொள்கையை மனதில் ஏந்தி, இந்த சமுதாய வளர்ச்சிக்காக உயிர் தியாகம் செய்தவர்களை வணங்கும் எம் பணியை தடையின்றி முழுமையாக தொடர்கிறேன். இதன்படி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணமும் செய்து வருகிறேன். சென்ற இடம் எல்லாம் தன்னுடைய மகளாக என்னை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே எனது தந்தை எங்கள் சொத்து சுகம் தேடி வைக்காவிட்டாலும், நல்ல உறவுகளை தேடி வைத்திருக்கிறாரே என்று பார்க்கும்போது அவரது மகளாக இந்த அமைப்பை நான் நடத்துவதில் தவறில்லை என்றும் புரிந்து கொண்டேன்.

இந்த கால சூழ்நிலையில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு அரசியல் அங்கிகாரம் பெற வேண்டும், இதன் வழியாக நம் மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததால் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த முடிவில், நம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உதவிகள் பல செய்து வந்ததை மனதில் கொண்டு, தலைவர் பசுபதி பாண்டியன் மறைந்தபோது தமிழக அரசியலில் எந்த ஒரு கட்சியும் நமது துக்கத்தில் பங்கு கொள்ளாத போது அதிமுக பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா மட்டும் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதிமுக-வுக்கு ஆதரவு அளிக்க எங்கள் கூட்டமைப்பு சார்பாக முடிவு செய்தனர். அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரை நேரில் சந்தித்து எங்கள் ஆதரவையும் முழுமையாக தெரிவித்தோம்.

ஆனால், இந்த சூழ்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பார்வதி சண்முகச்சாமி தெரிவித்துள்ளார். இவருக்கும் இந்த அமைப்பு சார்ந்த யாருக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இவர் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த எனது தந்தைக்கு பாத்தியப்பட்ட ஆவனங்களையும், கூட்டமைப்பு சார்ந்த ஆவனங்களையும் இவர் வசம் வைத்துக் கொண்டு விதிமுறை மீறல்களை செய்து வருகிறார். அதில் ஒன்றான எங்கள் அமைப்பு சார்ந்த லெட்டர் பேர்டை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர் வசம் உள்ளவனவற்றை திரும்ப பெறவும், ஆனால் தவறான செயல்பாட்டின் மீது கூட்டமைப்பு சார்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைப்பு சார்ந்த வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆகவே, வருகின்ற மக்களவை தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு அதிமுகவை மட்டும் தான் ஆதரிக்கிறது. அதிமுகவின் வெற்றிக்கான தேர்தல் பிரச்சார பயணத்தையும் எனது தலைமையில் நிர்வாக பொறுப்பாளர்களுடன் தொடங்கி உள்ளேன். எங்கள் அமைப்பும், எங்கள் சமுதாய மக்களும் திமுக-வை ஆதரிக்க வேண்டும்.

இவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்த பலனும் இல்லை. எனவே எங்களது சமுதாயத்தினர் அனைவரும் எங்கள் பின்னாடி தான் உள்ளனர். அவர்கள் திமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறிக்கொண்டு எங்கு சென்றாலும் எங்கள் மக்களிடம் ஒரு ஓட்டு கூட அவர்களால் வாங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )