முன்னறிவிப்பு இன்றி நடைபெறும் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளால் பயணிகள் பரிதவிப்பு

முன்னறிவிப்பு இன்றி நடைபெறும் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளால் பயணிகள் பரிதவிப்பு

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடை மேடையில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக முதலாவது நடைமேடை முற்றிலுமாக தடுப்பு வேலிகள் அமைத்து, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக முதலாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வந்த முத்துநகர் விரைவு ரயில், மைசூர் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களுமே தற்போது இரண்டாவது நடை மேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இப்படி நடைமேடை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் ஏதும் தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தியாகும். மேலும் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கூட எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

பல பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்த பிறகுதான் இப்படி முதல் நடை மேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் பின்னரே வேக வேகமாக நடைமேடை மேம்பாலம் வழியாக முதலாவது நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
15 நிமிடம் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்தால் மட்டுமே முதலாம் நடைமேடையில் இருந்து இரண்டாம் நடை மேடைக்குச் சென்று ரயில் ஏறமுடியும். இந்த விபரம் அறியாத பயணிகள் வழக்கமான கால நேரத்தில் இரயில் நிலையம் வந்தால் நிக்க வேண்டிய இடத்தில் ரயில் இல்லாததை கண்டு தவற விட்டுவிட்டோமோ என்ற அச்சம் பயணிகளை பதட்டத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. ரயில் புறப்படும் நேரத்தில் பலரது செயல்பாடுகள் பரிதாபத்துக்குரியதாக அமைகிறது‌. இதையெல்லாம் அங்குள்ள இரயில்வே காவலர்கள் வேடிக்கை தான் பார்க்கிறார்களே தவிற பொதுமக்களுக்கு உதவிட முன்வருவதில்லை.

*இது குறித்து ரயில்வே நிர்வாகத்தில் விசாரித்த போது:-*

தூத்துக்குடி ரயில் நிலைய நிர்வாகம் சார்பில் செய்தி நாளிதழ்களுக்கும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் செய்தி குறிப்பு அனுப்பியதாகவும், ஆனால் அந்த செய்தியை எந்த ஒரு செய்தித்தாளும், ஊடகமும் வெளியிடவில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள்.. ஊடகங்களில் தான் செய்தி வரவில்லை என்றால், சமூக ஊடகங்களிலாவது இது பற்றிய தகவல் பரிமாறப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. இப்படி இருக்கையில் மக்களுக்காக பணியாற்றுவதாக கூறும் செய்தித்தாள்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் மக்களுக்கு பயன்படும் செய்தியை ஏன் வெளியிடவில்லை என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

ஒருவேளை தேர்தல் நேரமாக இருப்பதால் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறினாலும், இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த தகவல்களை முன்னுரிமை அளித்து செய்தித்தாள்களும் காட்சி ஊடகங்களும் செய்திகளை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

*இதனிடையே ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றோம்.*

இந்த முதலாம் நடைமேடை பராமரிப்பு பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி கீழூர் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்களும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் புறப்பாடு தற்காலிக நிறுத்த வசதியை ஏற்படுத்தி தருமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். பொதுமக்களின் நலன் கருதி இக்கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு வேண்டுகிறோம் என்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )