பாஜக – அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும்- புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பேட்டி

பாஜக – அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும்- புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பேட்டி

பாஜக – அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும் என புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் தூத்துக்குடியில் பேட்டி அளித்தனர்.

புரட்சிகர இளைஞர் முன்னணி தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளர் சுஜித் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவன், தூத்துக்குடி பகுதி பொறுப்பாளர் உத்தரம், அம்பை பகுதி பொறுப்பாளர் பாண்டியன், வீரவநல்லூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் பித்தன் ஆகியோர் கூட்டாக தூத்துக்குடியில் அளித்த பேட்டியின் போது கூறியதாவது: நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சியின் மதவெறி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மோடியின் மீது பொதுமக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். அந்த வெறுப்பை பொய் புரட்டுகள் மூலம் திசை திருப்பி மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் வெறியோடு உள்ளது.
பாஜக தமிழகத்தில் பாமக மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்த போது எட்டி பார்க்காத மோடி வெள்ள நிவாரணமாக 1 பைசா கூட கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடி, ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வந்து கொண்டிருக்கிறார். ஜனநாயக விரோத பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. 3ல் 2பங்கு தனித்துவ பலத்துடன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தற்போதுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பாஜக. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி அதிகாரம் மூலம் மத அடிப்படையிலான ராஜ்யமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அனைத்து அதிகாரத்திலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக-காரர்களையே கவர்னர்களாக ஆக்கியுள்ளனர். தன்னிட்சையாக செயல்படக்கூடிய அமைப்புகளாக தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்றவற்றை ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கருவிகளாக மாற்றியுள்ளனர். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே போலீஸ், ஒரே தேர்தல், ஒரே வரி என எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் குவித்து மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து எல்லாற்றுக்கும் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

பாஜகவிற்கு எதிராக விமர்சிக்கின்ற போராடுகின்ற சிறிய இயக்கங்களையும், தனி நபர்களையும் ஒடுக்க உபா போன்ற சட்டங்கள் மூலம் பழிவாங்கி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக மிருக பலத்துடன் வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது. மனு நீதி சட்டமே அரசியலமைப்புச் சட்டமாக்கப்படும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை புதைத்து விட்டு மதவாத பிற்போக்கு சாம்ராஜ்ஜியமாக மாற்றி மோடி அதன் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவார். எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் பாஜக வீழ்த்தியே ஆக வேண்டும்.
நேற்று வரை ஆட்சியில் இருந்த போது அதிமுக கட்சியை மோடிக்கு அடகு வைத்து விட்டு தமிழ்நாட்டுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்த அதிமுக. இப்போது தனது வாக்குகளை பாதுகாத்துக் கொள்ளும் நம்பாசையில் பாஜகவினர் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு தனியாக களமிறங்கியுள்ளது. மோடி அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள் எதை குறித்தும் மறந்தும் வாய் திறக்க மறுத்து திமுக எதிர்ப்பையே மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வரும் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்து நிறைவேற பாஜகவிற்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது எதிர்ப்பதாக நாடகமாடுகிறார் பழனிச்சாமி. ஓ.பி.எஸ், தினகரன் போன்றவர்களும் பாஜகவில் அடைக்கலமாகி இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு போடும் வாக்குகள் பாஜகவுக்கு உதவும் வாக்கு தான். நாம் தமிழர் கட்சியும் பாஜகவுக்கு உதவும் கட்சியாகத் தான் செயல்படுகிறது.
பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவும், தமிழகமும் சுடுகாடாக மாறும். விரட்டியடிக்க வேண்டிய கால கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். பாஜகவையும் அதன் கள்ளக் கூட்டணியையும் நிறுத்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவும் புரட்சிகர இளைஞர் முன்னணி முடிவு செய்து தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், குரும்பூர், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி வாகன பிரச்சாரம் மூலம் தெருமுனை கூட்டங்கள் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்;.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )