
கழிவுமீன் நிறுவனங்களை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு – தீவிரமடையும் பொட்டலூரணி ஊர்மக்கள் போராட்டம்
பொட்டலுாரணியில் அமைந்துள்ள கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகில் உள்ளது பொட்டலூரணி கிராமம். பொட்டலூரணி விலக்கில், தனியார் கழிவு மீன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கழிவு மீன்களைக் கொண்டு உற்பத்தி செய்யும்போது, வெளியேறும் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. விவசாய நிறுவனங்களில் நின்று வேலை செய்ய முடியவில்லை.
மேலும், நச்சுக்காற்றினைத் தேக்கி வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் திறந்து விடுகின்றனர். இதனால் ஆழ்ந்த தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு. குழந்தைகளும், முதியவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர்.
மேலும், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஒருபுறம், நிறுவன வளாகத்திற்குள் கிணறுகளாகத் தேக்கி வைப்படுகிறது. இந்த கிணறுகளால் இப்பகுதியின் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. பல சமயங்களில் நள்ளிரவு நேரங்களில் டேங்கர் லாரிகளில் கழிவுநீரினைக் கொண்டுவந்து விவசாய நிலங்களிலும், ஓடைகளிலும் ஊற்றி விட்டுச் சென்று விடுகிறனர்.
நேரடியாக வெளியேற்றப்படும் கழிவுநீரும், ஓடைகளிலும் விவசாய நிலங்களிலும் கலந்து காணப்படுகின்றன. மீன் கழிவு நிறுவனங்களை மூடக்கோரி முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர், கலெக்டர், சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, குடும்பநலத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, எம்.பி., – எம்.எல்.ஏ., என அனைவருக்கும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மூன்று ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்துள்ளோம்.
நிறுவனங்களை மூடக்கோரி ஊர்ப்பொதுமக்கள் சென்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கழிவு மீன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யும் வரை, தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது என ஊர்ப் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்துள்ளோம்.
எங்கள் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்ற அறிவிப்பு வெளியானவுடன், டிஎஸ்பி மற்றும் புதுக்கோட்டை ஆய்வாளர் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வாங்கன்னு வற்புறுத்தினர். நாங்கள் முடியாது என்று கூறினோம். நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் மீது பொய்வழக்கு தொடுத்து கைது செய்வோம் என மிரட்டினர். அப்படி பொய் வழக்கு தொடுத்து எங்கள் ஊர் மக்களை கைது செய்தால் போராட்டம் வீரியமடையும் என்று நாங்கள் கூறியுள்ளோம்.
இதுகுறித்து நாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலருடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்துவோம் என முடிவு செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.