ஜெயலலிதாவின் ஆன்மா என்ன நினைக்கும்? – இயக்குநர் பார்த்திபன் கேள்வி
ஜெயலலிதாவின் ஆன்மா என்ன நினைக்கும்? என்று தமிழக அரசியல் சூழல் குறித்து பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் திரையுலக பிரபலங்களில் சிலர், தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “முதன்முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல… ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மவுனத்தின் மாமர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை.
விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன். கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரி-ன் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள், அறியா பொதுஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல் !
‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை. சசிகலாவோ, ஓ.பி.எஸ்.ஸோ ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்!
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்! மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் ! நோட்டுக்காக அல்ல! நாட்டுக்காகவே ஓட்டு!” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்