ரூ.78 லட்சம் மோசடி: பெற்றோருடன் மகன் கைது
இரு மடங்காக திருப்பி தருவதாக கூறி, 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சப்படி அருகே, குருபராத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா, 54. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர், பெங்களூரு மாரத்ஹள்ளி பகுதியைச் சேர்ந்த ரத்தினம், 69; இவனது மகன் ரிச்சர்டு, 28.ரிச்சர்டு, லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில், உயர் அதிகாரியாக இருப்பதாகவும், தன் வங்கி கணக்கில், 5 கோடி ரூபாய் அளவுக்கு மாதச் சம்பளம் உள்ளது எனவும், ராமச்சந்திராவிடம் கூறியுள்ளான்.மேலும், அந்த பணத்தை எடுக்க, வரி மற்றும் பாதுகாப்பு தொகை அளிக்க வேண்டும்; பணத்தை எடுத்தவுடன், இரு மடங்காக திரும்பி தருவதாக கூறி, ராமச்சந்திரா மற்றும் நண்பர்கள் சிலரிடம், 2017 முதல், 78 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வரை, வாங்கி உள்ளான்.
இதற்கு, அவனது தந்தை ரத்தினம், 69, தாய் அமலி, 58, ஆகியோரும் உடந்தையாக இருந்துஉள்ளனர்.ஆனால், ரிச்சர்டு கூறியது போல், பணத்தை திரும்பி தராமல் இழுத்தடித்துள்ளான். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், ராமச்சந்திரா, நேற்று முன்தினம் புகார் செய்தார்.ரிச்சர்டு, அவனது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.