பாகிஸ்தானில் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாதுகாப்பு படைகள் அதிரடி
பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வழிபாட்டு தல தாக்குதல்
பாகிஸ்தானில் சிந்து மாகாணம், செவான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக குவிந்திருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நுழைந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் கட்டி எடுத்து வந்திருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த தாக்குதலில் 100 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 20 பேர் ஏதுமறியாத அப்பாவிக்குழந்தைகள் என்பது கல் நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 210 பேர் காயம் அடைந்து செவான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடம் அளிக்கிற வகையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து ஒடுக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார்.
இதேபோன்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா, “நாட்டின் ஒவ்வொரு சொட்டு ரத்த இழப்புக்கும் பழிதீர்ப்போம். நிச்சயமாக பழிதீர்ப்போம். யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது” என்று கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “சேவான் வழிபாட்டுதல தாக்குதல், பயங்கரவாதத்தின் மிக மோசமான வடிவம்” என கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “இது நமது கலாசாரத்தின், வரலாற்றின், நாகரிகத்தின் மீதான தாக்குதல். பயங்கரவாதிகளை எதிர்த்து ஒவ்வொரு தனி மனிதனும் போரிட வேண்டும். பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிரடி உத்தரவு
இந்த தாக்குதலுக்கு 3 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என சிந்து மாகாண அரசு அறிவித்து, கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கிடையே செவான் வழிபாட்டு தல தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நவாஸ் ஷெரீப் அரசு, பாதுகாப்பு படைகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கின.
39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சிந்து மாகாணத்தில் மட்டும் 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட மேற்கு மாகாணத்தில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் நாடு முழுவதும் 39 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நேற்று மதியம் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் முகாம்கள், மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் விடிய விடிய நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், 47 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் டோர்காம் எல்லை மூடி சீல் வைக்கப்பட்டது.
அத்துடன் தாங்கள் தேடி வருகிற 76 பயங்கரவாதிகளை ஒப்படைக்குமாறு ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.