ரயில் நிலையங்களில் மண்பானை தண்ணீர் வழங்க ஏற்பாடு – மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு

ரயில் நிலையங்களில் மண்பானை தண்ணீர் வழங்க ஏற்பாடு – மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மண்பானைகளில் வைக்கப்பட்டுள்ள இயற்கை குளிர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
நடப்பு கோடை காலத்தில் கடும் வெப்பநிலை நிலவுவதோடு கூடுதலாக வெப்ப அலையும் வீசுகிறது. இதன் மூலம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக வியர்வை வெளிப்பட்டு உடலில் நீர் சத்து குறைகிறது.

எனவே பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே சாரண சாரணியர், சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர், தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு இயற்கையான குளிர் குடிநீர் வழங்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, காரைக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் மண் பானைகளில் சேமிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்கள் குளிர் குடிநீர் வசதி ஆகியவற்றோடு கூடுதலாக இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மோர், தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் உடல் நீர் சத்து அதிகரிக்க உப்பு, சக்கரை கலந்த நீர்க்கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கரைசல் ரயில்வே வாரிய உத்தரவுப்படி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் மேலும் 20 குளிர் குடிநீர் சாதனங்கள் பொருத்தப்பட இருப்பதாக கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )