
வக்கீலை அவதூறாக பேசியதாக பெண் எஸ்.ஐ, மற்றும் பெண் காவலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி கடந்த டிச: 19ந்தேதி வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி, பெண் காவலர் சரண்யா இருவரும் முத்துசாமியை அவதுாறாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் செய்தார். மேலும் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க துாத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தூத்துக்குடி எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘துாத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது’ என, மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி மற்றும் பெண் காவலர் சரண்யா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.