
கோவில்பட்டியில் ஓசியில் சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டிப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓசியில் சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் 60 வயதான முதியவர் குருசாமி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அதன் எதிரிலேயே கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பார் வருகிறார். இந்த பாரில் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த 60 வயது முதியவர் குருசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அங்கு கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில நாட்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று நண்பகல் 2 மணிக்கு டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், சரக்கு கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் சரக்கு தர முடியும் என பார் ஊழியர் குருசாமி தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மூக்கையா பாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பார் ஊழியர் குருசாமி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மூக்கையா பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் முத்துக்குமார்