
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறித்த இருவர் கைது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் அப்துல் ரஹீம் (21) என்பவர் நேற்று (10.05.2024) இரவு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அப்துல்ரஹீமை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான சங்கர் மகன் செல்வகுமார் (எ) யானை செல்வம் (27) மற்றும் தமிழ்மணி மகன் ஆனந்த்பாபு (24) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி அப்துல் ரஹீமிடம் செல்போன் மற்றும் வெள்ளி கொடியை பறித்து சென்றது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் செல்வகுமார் (எ) யானை செல்வம் மற்றும் ஆனந்த்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்பிலான செல்போன் மற்றும் ரூபாய் 4,310/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.