
தூத்துக்குடியில் பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை- கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் இவர் நாகப்பட்டினம் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் அதில் ஒருவருக்கு திருமணமான நிலையில் மற்றொருவருக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுகுமார் கடந்த 10ம் தேதி சென்னைக்கு தனது குடும்பத்தை பார்க்க சென்றுள்ளார். தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அமுதா இன்று காலை வழக்கம்போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டு முன்பக்க கதவை திறந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு தென்பாகம் காவல் நிலையத்தில் சுகுமார் புகார் அளித்தார். இதையடுத்து தென்பாகம் காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் தடையவியல் துறையினர் ஆகியோர் வந்து கொள்ளை சம்பவம் குறித்து சோதனை நடத்தினர்.
இதில் சுகுமார் வீட்டிலிருந்து அவரது மகள் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கோட்டை சுவரை ஏறி குதித்த கொள்ளை கும்பல் வீட்டின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 2 லாக்கரையும் அருகே இருந்த சாவியை பயன்படுத்தி திறந்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் போலீசார் தேடி வருகின்றனர்.