
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலைகள் பறிமுதல் – கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ40 லட்சம் மதிப்பிலான 2 டன் எடையுள்ள பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, விரலி மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து என பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும், அவைகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலைத் தொடர்ந்து தருவைக்குளம் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், முதல் நிலை காவலர் இருதய ராஜ்குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கொண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு வந்த TN 39 V 6942 என்ற பதிவு எண் கொண்ட Eicher லோடு வேனை சோதனையிட்டதில் 30 கிலோ எடை கொண்ட 62 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரை பார்த்ததும் குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர்.
இந்த பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சம் ஆகும். இதையடுத்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் 2 டன் எடையுள்ள 62 பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.