
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை அறிவிப்பு
10.06.2024 முதல் 14.06.2024 வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
10.06.2024 முதல் 14.06.2024 முடிய மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுழல் காற்றானது மணிக்கு 45-55 கி.மீ முதல் 65கி.மீ வேகம் வரை வீசக்கூடும். மேலும், தமிழக கடலோர பகுதி மற்றும் குமரிக்கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 35-45 கி.மீ முதல் 550.0 வரை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தினங்களில் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியான வேம்பார் முதல் பெரியதாழை வரை அலைகளின் சீற்றமானது 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் நீளம் வரை எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர் துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்திடுமாறும் தங்களது சங்கங்களைச் சார்ந்த அனைத்து மீனவர்களும் அறிந்திடும் வண்ணம் அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.