கோவில்பட்டி அருகே பொறியாளர் வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே பொறியாளர் வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின் புதூர் சக்கரத்தாழ்வார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பொறியாளரான இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி டென்னிஸ் ராணி. இவருடைய மகள் சரிகா லெட்சுமி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது மகன் வினய் குமார் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததால் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக டென்னிஸ் ராணி ராசிபுரம் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்களுடைய வீடு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அருகில் இருந்தவர்கள் டென்னிஸ் ராணி மற்றும் நாலட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது. 15 பவுன் நகை வரை காணாமல் போய் இருக்கலாம் கூறப்படுகிறது. டென்னிஸ் ராணி வந்த பிறகு தான் காணாமல் போன நகைகள் மற்றும் பொருட்கள் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

செய்தியாளர்: முத்துக்குமார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )