படங்களில் சொல்லாமல் நீக்கப்படும் காட்சிகள்: சுஜா வாருணி வேதனை
தான் நடிக்கும் படங்களில், சொல்லாமல் நீக்கப்படும் காட்சிகள் குறித்து சுஜா வாருணி வேதனை தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்தவர் சுஜா வரூணி. சமீபத்தில் வெளியான ‘குற்றம் 23’ படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக அவருடைய காட்சிகள், படங்களிலிருந்து நீக்கப்படுவது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுஜா வாருணி கூறியிருப்பது “நாங்கள் இயக்குநர்களை நம்புகிறோம். சிலசமயம் அந்த நம்பிக்கை பொய்யாகிறது. ஒவ்வொரு நடிகரும் அவருக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்றே முயற்சிக்கின்றனர். படத்தின் நீளம் காரணமாக, அந்த காட்சியில் நடித்த குறிப்பிட்ட நடிகரிடம் சொல்லாமலேயே அவரது காட்சிகள் நீக்கப்படும்.
எனக்குப் பலமுறை இது நடந்திருக்கிறது. இன்னும் நடக்கிறது. மேலும் பலருக்கு நடக்கிறது. உங்கள் கதைக்கு என்ன தேவை என்று உங்களுக்கே தெரியவில்லையென்றால் ஏன் காசை வீணாக்கி, நடிகர்களின் நேரத்தை வீணாக்கி படம்பிடிக்கிறீர்கள்?
கவுரவ வேடம் ஏற்று நடிக்கும் வளர்ந்து வரும் நடிகர்களே, அப்படி செய்வது வீண். நான் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
புகழ்பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சிறப்புத் தோற்றம், கவுரவ வேடம் எல்லாம் சரிபட்டு வரும். இந்த மாதிரி விஷயங்கள் நடிகர்களை பெரிதும் பாதிக்கும். ஆனால் உங்கள் நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள்.
நாம் வலிமையாக இருக்க வேண்டும். நம்பிக்கை என்னை செலுத்தும். பாடங்கள் கற்றுக்கொள்கிறேன். சீக்கிரம் பிரகாசமாக ஜொலிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சுஜா வாருணி.