
தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் அருகில் மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ரூ15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
தூத்துக்குடி சந்தை ரோட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் அருகில் உள்ள சந்தை ரோட்டில் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த டட்லி என்பவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்றிரவு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென அருகில் உள்ள மாவுமில் மற்றும் அருகில் உள்ள கடைகளுக்கு பரவத்தொடங்கியது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த தீயணைப்பு துறையினர் மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரத்தை துண்டித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் டட்லிக்கு சொந்தமான கடையில் இருந்த சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் பொருட்கள் என ரூ15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதேபோன்று மாவு மில்லில் இருந்த இயந்திரங்களும் தீயில் சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.