கருத்துக்கணிப்பால் பீதி; மாயாவதியுடன் கூட்டணிக்கு தயாராகிறார் அகிலேஷ்
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், உ.பி.,யில் தேவைப்பட்டால் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, மாயாவதி, முலாயமை விமர்சனம் செய்தார். ஆனால், அகிலேஷை பற்றி அவ்வளவாக விமர்சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 190 முதல் 211 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
விரும்பவில்லை:
இந்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்துக்கணிப்பு தொடர்பாக கூறுகையில், நான் எப்போதும் பகுஜன் சமாஜ் கட்சியை மரியாதையுடன் நடத்தி வந்துள்ளேன். இதனால், அவர்களிடம் உதவி கேட்பது இயற்கையானது தான். மாநிலத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமைந்தால், மாநிலத்தை பா.ஜ., பின்புறவாசல் வழியாக ஆட்சி செய்யும். இதனை மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சி:
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.,வின் ஓம் மாத்தூர், கடந்த 6 மாதங்களாக முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடர்ந்து தனது நிலையை மாற்றி வருகிறார். உ.பி.,யில் பா.ஜ., மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும். அனைத்து தேர்தல் கணிப்புகளும் இதனையை தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.