
காது குத்து விழா நடந்த மறுநாளே கடலில் மூழ்கி சிறுமி உட்பட இருவர் பலி- விளாத்திகுளம் அருகே பரிதாபம்
விளாத்திகுளம் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ்நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். கூலி தொழிலாளி. இவருடைய மகள்கள் சஹானா, சாதனா (வயது5). இவர்களுக்கு நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முடி இறக்கி, காதுகுத்தும் விழா நடத்துள்ளது அதைத்தொடர்ந்து நேற்று மதியம் சசிகுமார் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வேம்பார் கடற்கரைக்கு வேனில் சென்றுள்ளார். வேம்பார் ஆறு, கடலில் சங்கமிக்கும் முகத்துவாரம் பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர் அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதில் ராட்சத அலையில் சிக்கிய சிறுமி சாதனா கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டாள். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். உடனே உறவினரான /விளாத்திகுளத்தைச் சேர்ந்த தங்கமுத்துபாண்டி மகன் டேனி (25) விரைந்து சென்று கடலில் தத்தளித்த சிறுமி சாதனாவை மீட்க போராடினார். இதில் அவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கூச்சலிட்டு கதறினர். உடனே அங்கிருந்த மீனவர்கள் ஓடிச்சென்று கடலில் தத்தளித்த சிறுமி சாதனா, டேனி ஆகி யோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து சூரங்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காது குத்தும் விழா நடத்திய மறுநாளே சிறுமி மற்றும் உறவினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.