
வாங்கிய பன்றி இறைச்சிக்கு பணம் கொடுக்காததால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை- தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் கடந்த 13/ 4 /2017 ஆம் ஆண்டு பன்றி இறைச்சியை வாங்கிவிட்டு பணம் கொடுக்காதால் ஆத்திரத்தில் கூலி தொழிலாளி மகாராஜா என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில், நண்பர்களான செல்வகுமார் மற்றும் மரிய செல்வம் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்- || நீதிபதி உதயவேலன் தீர்ப்பளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவர் வேம்பார் பஜாரில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மகாராஜா என்பவர் கடந்த 16/03/ 2017 ஆம் ஆண்டு பன்றி இறைச்சி வாங்கி உள்ளார் . ஆனால் அதற்குரிய பணத்தை பின்னர் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்
இந்நிலையில் கடந்த 25 /3 /2017 அன்று மகாராஜாவிடம் வெற்றிவேலின் மகனான செல்வகுமார் என்பவர் பன்றி இறைச்சி வாங்கியதற்கான பணத்தை கேட்டுள்ளார். அதற்கு மகாராஜா பணம் தர முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான மரிய செல்வம் ஆகியோர் கடந்த 13 /4 /2017 அன்று மகாராஜா மற்றும் அவரது தம்பி தர்மராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் மகாராஜா உடன் இருந்த அவரது தம்பி தர்மராஜிற்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரை ஓட சொல்லிவிட்டு மகாராஜாவை செல்வக்குமார் மற்றும் மரிய செல்வம் ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூரங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு எண் -ll நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி உதய வேலன் குற்றவாளிகள் செல்வகுமார் மற்றும் மரிய செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் .
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.